நடுவரின் நாற்காலியை தாக்கிய பிரபல டென்னிஸ் வீரர் - லட்சக்கணக்கில் அபராதம்
தனது டென்னிஸ் மட்டையால் நடுவரின் நாற்காலியை ஆவேசத்துடன் தாக்கிய பிரபல வீரருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது.
சமீபத்தில் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரெவ் ஜோடி தோல்வியடைந்தது.
இதனால் அதிருப்தியடைந்த அலெக்ஸாண்டர் ஸ்வரெவ் போட்டி முடிந்ததும் நடுவரை கடுமையாக தாக்கி பேசியதோடு மட்டுமல்லாமல் தனது டென்னிஸ் மட்டையால் நடுவரின் நாற்காலியை ஆவேசத்துடன் தாக்கினார்.
ஸ்வரெவ்வின் இந்த செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மெக்சிகோ ஓபனில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேற்றப்பட்டார்.
மேலும் நடுவரை வசைபாடியதற்காக 20 ஆயிரம் அமெரிக்க டாலர், போட்டியின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக 20 ஆயிரம் டாலர் என ஸ்வரெவ்விற்கு இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.