குழந்தைகளை ஆயுதமாக பயன்படுத்துகிறார் உள்துறைச் செயலர்: லேபர் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு
பிரித்தானிய உள்துறைச் செயலரின் புலம்பெயர்தல் கொள்கைகள் நியாயமற்றவை என்று கூறியுள்ள லேபர் கட்சி சார்ந்த மூத்த அரசியல்வாதி, அவர் குழந்தைகளை ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
லேபர் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

ஆனால், அவரது நடவடிக்கைகளுக்கு அவர் சார்ந்த லேபர் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஆளும் லேபர் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஆல்ஃப் டப்ஸ் என்னும் ஆல்பிரட் (Alfred Dubs).
இரண்டாம் உலகப்போர் துவங்கும் முன், 1939ஆம் ஆண்டு, செக்கோஸ்லோவேகியா நாட்டிலிருந்து ஒரு குழந்தையாக நாஸிக்களுக்கு தப்பி லண்டனுக்கு வந்தவர் ஆல்பிரட்.
அகதிகளுக்காக, குறிப்பாக அகதிக் குழந்தைகளுக்காக குரல் கொடுத்துவருவதையே வாழ்வின் பிரதான விடயமாக செய்துவருபவர் அவர்.
இந்நிலையில், பிரித்தானிய உள்துறைச் செயலரும், தான் சார்ந்த லேபர் கட்சியைச் சார்ந்தவருமான ஷபானா மஹ்மூதின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆல்பிரட்.

குழந்தைகள் இருந்தாலும் அவர்களையும் சேர்த்து புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் ஷபானாவின் திட்டம் குறித்து விமர்சித்துள்ள அவர், குழந்தைகளை ஆயுதமாக பயன்படுத்தும் உள்துறைச் செயலரின் செயல் மோசமானது என்று கூறியுள்ளார்.
நாம் பிரித்தானியாவுக்கு புலம்பெயரும் மக்களை வெளியேற்றுவோமானால், ஒருவேளை, அவர்களுக்கு பிரித்தானியாவில் பிள்ளைகள் பிறந்திருந்தால் அவர்களை என்ன செய்வோம்?
இங்கு பிறந்து, இங்கு பள்ளிகளில் படித்துவரும் பிள்ளைகளிடம், உங்கள் பெற்றோர் பிரித்தானியாவில் வாழமுடியாது, அதனால் நீங்களும் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என கூறப்போகிறோமா என கேள்வி எழுப்புகிறார் ஆல்பிரட்.
பாதுகாப்பானவை என கருதப்படும் நாடுகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்பும் விடயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறும் ஆல்பிரட், அவர்கள் உண்மையாகவே தங்கள் நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்களா என்பதை நாம் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார்.
இல்லையென்றால், நாம் செய்யும் விடயம் மோசமானதாக இருக்கும், நாம் மக்களை ஆபத்துக்குள் திருப்பி அனுப்புவதாகிவிடும், பிரித்தானியா அப்படிப்பட்ட நாடு அல்ல, அது நல்ல நாடு என நான் நினைக்கிறேன் என்கிறார் ஆல்பிரட்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |