உலகின் பெரும் கோடீஸ்வர பெண்மணி: யாரிந்த ஆலிஸ் வால்டன்
ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியல் 2025 இல் உலகின் பெரும் கோடீஸ்வர பெண்மணியாக தெரிவாகியுள்ளார் வால்மார்ட் வாரிசான ஆலிஸ் வால்டன்.
வால்மார்ட் நிறுவனர்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், உலகின் 406 பெண் பில்லியனர்கள் பட்டியலில் 102 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் வால்டன் முதலிடத்தில் உள்ளார்.
வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டன் மற்றும் ஹெலன் வால்டன் ஆகியோருக்கு அக்டோபர் 7, 1949 அன்று ஆர்கன்சாஸின் நியூபோர்ட்டில் ஆலிஸ் வால்டன் பிறந்தார். 1966ல் பெண்டன்வில்லே உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
டெக்சாஸின் சான் அன்டோனியோவில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1974ல், தனது 24 வயதில் லூசியானாவில் உள்ள முதலீட்டு வங்கியாளரை மணந்தார், ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார்.
பின்னர் ஒரு ஒப்பந்ததாரரை மணந்தார், ஆனால் அவர்களும் விரைவில் பிரிந்தனர். ஆர்வெஸ்ட் வங்கி குழுமத்தில் முதலீட்டு நடவடிக்கைகளின் தலைவராக பணியாற்றுவதற்கு முன்பு, ஆலிஸ் வால்டன் ஃபர்ஸ்ட் காமர்ஸ் கார்ப்பரேஷனில் பங்கு ஆய்வாளராகவும் பண மேலாளராகவும் பணியாற்றினார்.
1988ல், ஆலிஸ் வால்டன் முதலீட்டு வங்கியான லாமா நிறுவனத்தை நிறுவினார், அதில் அவர் அதன் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டார். 1999ல் இந்த வங்கி மூடப்பட்டது.
சொத்துக்களை செலவிட்டு
வடமேற்கு ஆர்கன்சாஸ் பிராந்திய விமான நிலையத்தின் வளர்ச்சியில் அவர் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் வடமேற்கு ஆர்கன்சாஸ் கவுன்சிலுக்குத் தலைமை தாங்கிய முதல் நபரும் ஆலிஸ் ஆவார்.
புதிய விமான நிலையத்திற்கு 109 மில்லியன் டொலர் தேவைப்பட்ட நிலையில், ஆலிஸ் வால்டன் தனிப்பட்ட முறையில் $15 மில்லியன் வழங்கினார், மேலும் அவரது லாமா நிறுவனம் பத்திரங்கள் மூலம் $79.5 மில்லியன் திரட்ட உதவியது.
அவர் வால்மார்ட்டின் செயல்பாட்டில் ஒருபோதும் தீவிரமாகப் பங்கேற்றதில்லை, அதற்கு பதிலாக தனது சொந்த வணிக முயற்சிகளில் கவனம் செலுத்த விரும்பினார்.
குதிரை வளர்ப்பு முதல் விலையுயர்ந்த கலைப்படைப்புகளுக்கு என அனைத்திற்கும் அவர் தனது சொத்துக்களை செலவிட்டு வருகிறார். 2011ல் 50 மில்லியன் டொலர் மதிப்பிலான கலை அருகாட்சியகம் ஒன்றை நிறுவினார், தற்போது அதன் மதிப்பு 500 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |