பறக்கும் தட்டுகளுக்கு பின்னால் சீனா... வேற்றுகிரகவாசிகள் அல்ல: கசிந்த மிக ரகசிய தகவல்
பறக்கும் தட்டுகளுக்கும் வேற்றுகிரகவாசிகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை அமெரிக்க நிபுணர்கள் குழு உறுதி செய்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளால் மிக ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்பட்டிருந்த பறக்கும் தட்டுகள் தொடர்பான முக்கிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.
இதில் வேற்றுகிரகவாசிகளுக்கும் பறக்கும் தட்டுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பறக்கும் தட்டுகள் சீனா அல்லது ரஷ்யாவின் புதிய ஆயுதமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், பறக்கும் தட்டுகள் என்பது கண்டிப்பாக அமெரிக்காவின் ரகசிய திட்டம் அல்ல என்பதையும் கசிந்த அந்த தகவலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்க கடற்படை விமானிகள் சுமார் 120 பறக்கும் தட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும், பறக்கும் தட்டுகள் விளக்கமுடியாத ஒருவகை வடிவத்தில் நகர்வதையும், மாயமாவதையும், பாதை மாற்றிக்கொள்வதையும் அமெரிக்க கடற்படை விமானிகள் பதிவு செய்துள்ளனர்.
இதனால், குறித்த பறக்கும் தட்டுகள் உண்மையில் சீனா அல்லது ரஷ்யாவின் ஹைபர்சோனிக் தொழில்நுட்பமாக இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானங்கள் அல்லது ஆயுதங்கள் மணிக்கு 4,000 மைல்கள் செல்லக் கூடியவை. அவைகளை இடைமறிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று எனவும் நிபுணர்கள் தரப்பு விளக்கமளித்துள்ளனர்.
அமெரிக்க சிறப்பு நிபுணர்கள் குழு, பறக்கும் தட்டுகள் தொடர்பில் தயாரித்துள்ள இந்த அறிக்கையானது ஜூன் 25ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தற்போது அந்த அறிக்கையின் ஒருசில முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதுடன், பறக்கும் தட்டுகள் தொடர்பில் இதுவரை நம்பப்பட்டு வந்த பல பிம்பங்களை மொத்தமாக உடைத்துள்ளது.
இருப்பினும், பறக்கும் தட்டுகளுக்கு பின்னால் சீனாவும் ரஷ்யாவும் இருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் கூறினாலும், அதற்கான ஆதாரங்களை வெளியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.