ஏலியன்களால் திருமண வாழ்வையும் வேலையையும் இழந்த பிரித்தானியர்: பின்னர் நடந்தது
பிரித்தானியாவில் ஏலியன்களால் ஒருவர் தனது திருமண வழ்வையும் வேலையையும் பறிகொடுத்தார்.
அது 1980ஆம் ஆண்டு... நவம்பர் மாதம் 28ஆம் திகதி, ஒரு மழை நாள். அப்போது Alan Godfreyக்கு 33 வயது. பொலிசாரான அவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள்.
அதிகாலை 5.15க்கு சாலையில் மேற்கு யார்க்ஷையரில் பணி நிமித்தம் பயணித்துக்கொண்டிருந்த அவர், வளைவு ஒன்றில் திரும்பும்போது, திடீரென அவரது கண்களில் ஒரு காட்சி பட்டது.
சுமார் 20 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட வைர வடிவம் கொண்ட ஒரு வாகனம் தரையிலிருந்து 5 அடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்தது.
ஒளி வீசும் அந்த வாகனம் மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. அவரது பொலிஸ் புத்தி உடனே வேலை செய்ய, தனது சக பொலிசாரை அழைக்க முயன்றிருக்கிறார் Alan.
ஆனால், அவரது காரிலிருந்த ரேடியோ கருவி வேலை செய்யவில்லை. உடனே, தான் பார்த்ததை படமாக வரைய முயன்றிருக்கிறார் Alan.
அப்போது சட்டென தன்னை யாரோ புகைப்படம் எடுப்பது போல ஒரு ஒளி அவரது முகத்தில் அடிக்க, அடுத்து அவருக்கு நினைவு வந்தபோது, சாலையின் எதிர் பக்கத்தில், தனது பொலிஸ் நிலையத்தை நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் அவர்.
ஆனால், இந்த விடயத்தை அவர் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, அது அவரது வேலைக்கே உலைவைத்துவிட்டது.
அவர் இல்லாததை இருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு பேசுவதாக மக்கள் கருத, அவர் மதுபானத்துக்கு அடிமையாக, அவரது திருமண வாழ்வும் முறிந்திருக்கிறது.
அப்புறம் கொஞ்சம் காலத்துக்குப் பிறகு, அதாவது 1995இல் அவர் இரண்டாவது முறையாக Kathryn என்ற பெண்ணை திருமணம் செய்ய, அதற்குப் பிறகுதான் மீண்டும் சாதாரணமாக வாழத் தொடங்கியிருக்கிறார் Alan.
ஆனால், அதெல்லாம் பழைய கதை... இப்போது Alan ஒரு பிரபலம்! பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஏன், அவர் ஒரு புத்தகம் கூட எழுதியிருக்கிறார் தனது அனுபவத்தைக் குறித்து... அந்த புத்தகத்தின் பெயர், Who Or What Were They? என்பதாகும்.
ஒரு விடயம் குறித்து அவ்வப்போது நினைத்துப் பார்க்கிறேன் என்று கூறும் Alan, அன்று மட்டும் நான் அந்த பகுதிக்கு பயணிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என் வாழ்க்கையே வேறு மாதிரி இருந்திருக்கும் என்கிறார்.