பிரித்தானியாவில் முன்னணி ஊழியர்களுக்கு கடைசி எச்சரிக்கை! சுகாதார செயலாளர் திட்டவட்டம்
பிரித்தானியாவில் தடுப்பூசி போடாத முன்னணி சுகாதார ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சுகாதார செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் NHS-ல் உள்ள அனைத்து முன்னணி சுகாதார ஊழியர்களும் வரும் 2022 ஏப்ரல் 1-ஆம் திகதிக்குள் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது உறுதி என பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் முதலே கோவிட்-19 தடுப்புசியை பெறுவதற்கான தகுதியை பெற்றாலும், இதுவரை சுமார் 103,000 ஊழியர்கள், அதாவது இங்கிலாந்தில் உள்ள மொத்த NHS பணியாளர்களில் 8 சதவிகிதத்தினர் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று சஜித் ஜாவித் கூறினார்.
இதில், மருத்துவ காரணங்களுக்காகவும், நோயாளிகளுடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளாதவர்களுக்காகவும் கோவிட் தடுப்பூசி தேவைக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதால், கொள்கையின் அடிப்படையில் சிலர் தங்கள் வேலையை விட்டுவிடலாம் என்ற கவலையும் உள்ளது.
NHS-ல் 10,000 மருத்துவர்கள் மற்றும் 35,000 செவிலியர்களின் பற்றாக்குறை உட்பட, கோவிட் தாக்குவதற்கு முன்பு ஏற்கனவே சுமார் 100,000 காலியிடங்கள் இருந்தன. இந்நிலையில், ஊழியர் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
இருப்பினும், தடுப்பூசி போடாத ஊழியர்களால் நோயாளிகளுக்கோ சக ஊழியர்களுக்கோ ஆபத்து ஏற்படும் நிலையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜாவித் கூறினார்.
இதனால் பாரபட்சமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள், வரவேற்பாளர்கள் மற்றும் கிளீனர்கள் உட்பட அனைத்து முன்னணி NHS ஊழியர்களும் ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசியைப் பெற வேண்டும் அல்லது வேலை இழக்க நேரிடும் என்று சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் இன்று தெரிவித்தார்.