கனடாவுக்கு மாற்றாக சர்வதேச மாணவர்கள் கல்வி கற்க சாதகமான நாடுகள்...
கனடாவுடனான தூதரக உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவுக்குக் கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துவருகிறது.
இந்நிலையில், கனடாவுக்கு மாற்றாக, வேறு எந்தெந்த நாடுகளில் சர்வதேச மாணவர்கள் கல்வி கற்க சாதகமான சூழல் உள்ளது என பார்க்கலாம்.
அமெரிக்கா
2023ஆம் ஆண்டின் இறுதிக்காலாண்டில், கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ள அதே நேரத்தில், 2022 - 23 கல்வியாண்டில், அமெரிக்காவுக்குக் கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
2022 - 23 கல்வியாண்டில் அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்றுள்ள இந்திய மாணவ மாணவியரின் எண்ணிக்கை 268,923 ஆகும்.
அமெரிக்கா மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகம், அவுஸ்திரேலியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழலை வழங்குகின்றன.
ஜேர்மனி
மேலும், ஜேர்மனியும் கல்வி கற்பதற்கு உகந்த ஒரு நாடாகும். ஜேர்மனியிலுள்ள பெரும்பாலான பொதுப்பல்கலைக்கழகங்களில் கல்விக்கட்டணம் என தனியாக ஒரு கட்டணம் கிடையாது என்பது ஒரு நல்ல செய்தியாகும்.
சர்வதேச மாணவர்கள் செமஸ்டர் கட்டணம் என ஒரு கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும். அது பொதுவாக ஒரு பெரிய தொகையாக இருக்காது. இந்தக் கட்டணம் நிர்வாகச் செலவுகள் மற்றும் நூலகம், விளையாட்டு அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும். கனடாவில் வீட்டு வாடகையும், விலைவாசியும் ராக்கெட் போல மேல்நோக்கிச் செல்லும் நிலையில், ஜேர்மனியில் விலைவாசி அந்த அளவுக்கு அதிகம் இல்லை.
ஸ்பெயின்
ஸ்பெயினில் பொதுவாக பொதுப்பல்கலைக்கழகங்கள் குறைவான கல்விக்கட்டணமே வசூலிக்கின்றன. இளங்கலை பட்டப்படிப்புக்கு, ஆண்டொன்றிற்கு 750 யூரோக்கள் முதல் 2,500 யூரோக்கள் வரையும், முதுகலை பட்டப்படிப்புக்கு, 1,000 யூரோக்கள் முதல் 3,500 யூரோக்கள் வரையும் கல்விக்கட்டணம் இருக்கும்.
நியூசிலாந்து
நியூசிலாந்து பல்கலைக்கழகங்களில், ஏராளமான கல்விப்பிரிவுகள் உள்ளன. அவற்றிலிருந்து உங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். நியூசிலாந்தில் கல்வி கற்பது, கொஞ்சம் செலவு பிடிக்கும் விடயம்தான் என்றாலும், அங்கு சர்வதேச மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் மறும் பிற நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
ரஷ்யா
கணிதம், இயற்பியல்,பொறியியல் மற்றும் மருத்துவம் முதலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் பொருத்தவரை, கல்வி கற்க, ரஷ்யா சிறந்த இடமாக கருதப்படுகிறது. மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது, கல்விக்கட்டணம் கையைக் கடிக்கும் அளவுக்கு இருப்பதில்லை. விலைவாசியும் குறிப்பாக சிறிய நகரங்களில் சமாளிக்கும் அளவிலேயே உள்ளதுடன், ரஷ்யாவிலும் சர்வதேச மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் மறும் பிற நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
பின்குறிப்பு: நீங்கள் கல்வி கற்க எந்த பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்கிறீர்கள், எந்தப் பாடத்திட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து கல்விக்கட்டணம் மாறுபடும் என்பதையும், பிஸினஸ் மற்றும் மருத்துவப் பிரிவுகளுக்கு அதிக கட்டணம் இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |