இது நகையல்ல வரலாறு... தன் தாயின் நினைவாக அவரது நகையை அணிந்திருக்கும் இலங்கைத் தமிழ்ப்பெண்ணின் அனுபவம்
பெண் பிள்ளைகள் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்லும்போது, தான் பெரிதும் விரும்பி வைத்திருந்த நகை ஒன்றை மகளுக்கு அணிவித்து அனுப்பும் வழக்கம் பல நாடுகளில் உள்ள தாய்மார்களிடம் இன்றும் காணப்படுகிறது.
அப்படி, தன் தாய் தனக்கு கொடுத்த ஒரு நகையைக் குறித்த தனது அனுபவத்தை விவரிக்கிறார் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர்.
ஒன்ராறியோவில் வாழும் சுஜா (30), இளம் வயதில் யுத்தத்துக்குத் தப்பி தன் பெற்றோருடன் இலங்கையிலிருந்து அகதியாக கனடா வந்தவர்.
சுஜாவுக்கு அவரது தாயார் திருமணப்பரிசாக நெக்லஸ் ஒன்றை அளித்தாராம். சுஜாவின் பாட்டி, அதாவது சுஜாவின் தாயின் தாயார், அவரது மகள் சிறுவயதாக இருக்கும்போதே இறந்துபோனதால், அவரது சகோதரிகள் சேர்ந்து அவருக்கு திருமணச் சீர் கொடுப்பதற்காக ஒரு நெக்லசை வாங்கியிருக்கிறார்கள். அந்த நெக்லசைத்தான் இப்போது சுஜாவின் தாய் அவருக்கு கொடுத்திருக்கிறார்.
அது ஒரு மெல்லிய செயின், அதில் பதிக்கப்பட்டிருந்த கற்களும் விலையுயர்ந்தவை அல்ல. என்றாலும், அதன் பின்னால் இருக்கும் கதை பெரியது அல்லவா? திருமணம், சிறு வயதிலேயே கணவனின் பிரிவு, கனடாவுக்கு புலம்பெயர்தல், இரண்டு பெண் பிள்ளைகளை தன்னந்தனியாக வளர்த்தல் என தன் தாயின் சரித்திரத்தை சுமந்துகொண்டிருக்கும் ஒரு விடயமாக அந்த நெக்லசைப் பார்க்கிறார் சுஜா.
அதன் விலை என்ன என்று நான் பார்க்கவில்லை, அது விலை குறைவானதுதான் என்பதும் எனக்குத் தெரியும், ஆனால், என்னைப் பொருத்தவரை என் தாய்க்குச் சொந்தமான அந்த நெக்லஸ் ஒரு விலை மதிப்பில்லாத நகை என்கிறார் சுஜா.
தனக்கு ஆண் பிள்ளைகள் மட்டுமே இருப்பதால், தன் சகோதரியின் மகள்களில் ஒருவருக்கு அந்த நெக்லசை சரியான நேரத்தில் பரிசளிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் சுஜா!