அமேசான் செய்த சிறிய தவறு! வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்?
அமேசானில் வாடிக்கையாளர்களை ஏமாற்றம் அடையச் செய்யும் வகையில், தள்ளுபடி விலை பதிவிடுவதில் சிறிய தவறு ஏற்பட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமேசான் ஷாப்பிங் தளத்தில் ரூ.96,000 விலை கொண்ட 1.8 டன் டோஷிஃபா நிறுவன ஏசியின் விலை தள்ளுபடி போக 5,800 ரூபாய்க்கு கிடைக்கும் என பட்டியலிடப்பட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அது அமேசான் தரப்பின் தவறு என தெரியவந்தது.
அமேசானில் சில நேரங்களில் பொருட்களை வாங்கும் போது சிலருக்கு பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. உதாரணமாக ஐபோன் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு செங்கல் டெலிவரி செய்யப்பட்ட கதைகளை சொல்லலாம். இதே போல எண்ணற்றவர்களுக்கு தாங்கள் ஆர்டர் கொடுத்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
ஆனால் தற்போது விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட பொருளின் விலையிலேயே மிகப்பெரும் குளறுபடி நடந்தேறியிருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமேசானில் அதிக விலை கொண்ட Toshiba 2021 ரேஞ்ச் ஸ்பிளிட் ஏசிக்கு 94% தள்ளுபடி தரப்பட்டிருந்தது வாடிக்கையாளர்களை ஈர்த்தது. டோஷிபா நிறுவனத்தின் 1.8 டன் 5 ஸ்டார் இன்வர்டர் ஸ்பிலிட் ஏசியின் உண்மையான விலை 96,700 ரூபாயாகும்.
ஆனால் இந்த ஏசி, 94% தள்ளுபடி விலையில் 5,900 ரூபாய்க்கே விற்பனைக்கு கிடைக்கும் எனவும், மாத தவணையாக 278 ரூபாய் செலுத்தினால் போதுமானது, 90,800 ரூபாயை மிச்சப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இது அமேசான் தரப்பின் தவறு என பின்னர் தெரியவந்தது. சுதாரித்துக் கொண்ட அமேசான் உடனடியாக இந்த தவறை சரிசெய்துவிட்டது. தற்போது அந்த ஏசியின் விலை 59,000 என மாற்றப்பட்டிருக்கிறது.
எனினும் சில வாடிக்கையாளர்கள் 5900-க்கு இந்த ஏசியை புக் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த ஏசி டெலிவரி ஆகுமா என்பது குறித்து அமேசான் தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் இதுவரை வரவில்லை.