வட கொரிய உளவாளிகள் என சந்தேகம்... வேலைக்கான 1800 விண்ணப்பங்களை முடக்கிய நிறுவனம்
வட கொரிய உளவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 1,800-க்கும் மேற்பட்ட வேலை விண்ணப்பங்களை முடக்கியுள்ளதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசானின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் நோக்கம்
திருடப்பட்ட அல்லது போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி வட கொரியர்கள் தொலைதூரத்தில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படும் ஐடி வேலைகளுக்கு விண்ணப்பிக்க முயன்றனர் என்று அமேசானின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஸ்டீபன் ஷ்மிட் ஒரு லிங்க்ட்இன் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர்களின் நோக்கம் பொதுவாக நேரடியானது என தெரிவிக்கும் அவர், வேலை பெறுவது, சம்பளம் வாங்குவது, அந்தச் சம்பளப் பணத்தை வட கொரிய நிர்வாகத்தின் ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்துவது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் போக்கு, குறிப்பாக அமெரிக்காவில், தொழில்துறை முழுவதும் பரவலான அளவில் நிகழ வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், வடகொரியாவைச் சேர்ந்த உளவாளிகள் இணையவழி மோசடிகளில் ஈடுபடுவது குறித்து அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் அமேசானில் வட கொரியர்களிடமிருந்து வரும் வேலை விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தவறான வடிவத்தில் உள்ள தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பொருந்தாத கல்விப் பின்னணி போன்ற வட கொரியர்களின் போலி வேலை விண்ணப்பங்களின் அறிகுறிகளைக் குறித்து நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஷ்மிட் எச்சரித்தார்.
அமெரிக்க அரசாங்கம்
இதனிடையே, ஜூன் மாதம், வட கொரிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களால் நாடு முழுவதும் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வந்த 29 Laptop Farms-களை கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Laptop Farms என்பது அமெரிக்காவில் அமைந்துள்ள, ஆனால் நாட்டிற்கு வெளியே தொலைவிலிருந்து இயக்கப்படும் கணினிகளைக் குறிப்பிடுகிறது.

சட்டவிரோதமாக செயல்படும் இந்த குழுக்கள் வடகொரிய நாட்டவர்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க உதவுவதற்காக, அமெரிக்கர்களின் திருடப்பட்ட அல்லது போலியான அடையாளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஜூலை மாதம், வடகொரிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களில் தொலைதூர வேலைகளைப் பெறுவதற்கு உதவுவதற்காக, Laptop Farms ஒன்றை நடத்திய அரிசோனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த திட்டத்தினூடாக அரிசோனா பெண்ணும் வட கொரியாவும் 17 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான ஆதாயமடைந்ததாக விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |