16000 பேர்களுக்கு அதிர்ச்சியளிக்கவிருக்கும் அமேசான்: சென்னை, பெங்களூரு ஊழியர்களுக்கு சிக்கல்?
அமேசான் நிறுவனம் இந்த வாரமே மற்றொரு பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.
கடுமையாகப் பாதிக்கும்
சியாட்டிலை தலைமையிடமாகக் கொண்ட அந்த நிறுவனம், செவ்வாய்க்கிழமை தொடங்கி உலகெங்கிலும் சுமார் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 30,000 பதவிகளை நீக்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
வெளியான தகவலின் அடிப்படையில், இந்த புதிய சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கைகள், இந்தியாவில் உள்ள ஊழியர்கள் குழுக்களை முன்பை விட கடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reddit மற்றும் Blind போன்ற தளங்களின் பகிரப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், அமேசான் நிறுவனம் வரும் நாட்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவிக்கக்கூடும்.
இந்த ஆட்குறைப்பு அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட பல துறைகளில் உள்ள ஊழியர்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையான அமேசான் நிர்வாகத்தின் முடிவுகளைப் பொறுத்தமட்டில், இந்தியாவில் உள்ள அணிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கும் என்றே தெரிய வருகிறது.
பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் உள்ள இந்திய கார்ப்பரேட் ஊழியர்கள் இந்த நேரத்தில் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
அமேசானின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு பிற்பகுதியில் தொடங்கியது, அப்போது அந்த நிறுவனம் இந்த மாபெரும் நடவடிக்கையின் முதல் கட்டமாக சுமார் 14,000 உயர் பதவிகளில் இருந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
கட்டமைப்பு மாற்றங்கள்
2026ல் மட்டும் 30,000 வேலைகளை நீக்குவதற்கான தனது திட்டங்களை அமேசான் முன்னெடுத்தால், அது 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் அந்த நிறுவனம் மேற்கொண்ட 27,000 வேலை நீக்கங்களையும் மிஞ்சிவிடும்.
அமேசான் நிறுவனம் உலகளவில் சுமார் 1.57 மில்லியன் (ஏறக்குறைய 16 லட்சம்) பேருக்கு வேலை வழங்குகிறது, ஆனால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் கவனம், சுமார் 3,50,000 பேர் கொண்ட உயர் பதவிகளில் உள்ள ஊழியர்கள் மீது செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், குறுகிய கால செலவுக் குறைப்புகளை விட கட்டமைப்பு மாற்றங்களிலேயே கவனம் செலுத்துவதாக அமேசான் தெரிவித்துள்ளது.
இந்த வேலை நீக்கங்கள் நிதி சார்ந்த காரணங்களுக்காக அல்ல, மாறாக நிறுவனத்தின் கலாச்சாரத்தைச் சரிசெய்வதற்கும், நிறுவனத்தில் நிலவும் அதிகப்படியான அதிகாரத்துவத்தைக் கையாள்வதற்கும் நோக்கமாகக் கொண்டவை என்று தலைமை நிர்வாக அதிகாரியான Andy Jassy விளக்கமளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |