எந்த இந்தியரும் அம்பேத்கரின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்து கொள்ள மாட்டார்: கமல் ஹாசன் ஆவேசம்
எந்த இந்தியரும் அம்பேத்கரின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார் என்று அமித் ஷாவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலங்களவையில் நேற்று முன்தினம் அரசியலமைப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "அம்பேத்கர், அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என்றார்.
கமல் கண்டனம்
இது தொடர்பாக கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம்.
அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார்.
அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.
நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75ஆம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும்.
இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |