வெறும் 60 மணி நேரத்தில் 2,870 km கடந்த Ambulance driver! நெகிழ வைக்கும் நிகழ்வு
ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் வெறும் 60 மணி நேரத்தில் 2,870 கி.மீ கடந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
ஆம்புலன்ஸ் டிரைவர்
இந்திய மாநிலமான கேரளா, கொல்லத்தைச் சேர்ந்த மைநாகப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் போதினி பஹான் (60). இவர், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.
இவருக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராய்கஞ்ச் நகருக்கு செல்வதே கடைசி ஆசையாக இருந்தது.
அவரை விமானம் மூலம் அழைத்துச் சென்றால் அதிகளவு செலவு ஏற்படும் என்பதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல அவரது மகன் முடிவெடுத்தார்.
இதற்கான பணியை கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண்குமார் (28) ஏற்றுக்கொண்டார். இதற்காக கடந்த ஏப்ரல் 22 -ம் திகதி காலை 7 மணியளவில் புறப்பட்ட ஆம்புலன்ஸ் ஏப்ரல் 24 -ம் திகதி மாலை 4.30 மணியளவில் ராய்கஞ்ச் நகருக்கு சென்றடைந்தது.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று சுமார் 2,870 கி.மீ தூரத்தை வெறும் 60 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் கடந்து சென்றுள்ளார்.
இது குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் கூறுகையில், "ஏற்கனவே நான் மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருப்பதால் வழி பரீட்சயமாக இருந்தது. நோயாளியை பாதுகாப்பாக அவரின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதே எனது முக்கியமான நோக்கமாக இருந்தது.
என்னுடைய நவீன ஆம்புலன்சுக்கு நன்றி. அதனால் எளிதாக 2800 கி.மீ தூரத்தை கடக்க முடிந்தது. அதற்கிடையில் சாலையும் நன்றாக இருந்தது.
எரிபொருள் நிரப்புவதற்காக மட்டும் வண்டியை நிறுத்தினேன். சிறிது நேரம் நிறுத்தும் போது நோயாளி சாப்பிடுவார். எனது அர்ப்பணிப்பும், பயிற்சியும் தான் பணியை முடிப்பதில் கவனம் செலுத்த வைத்தது.
ராய்கஞ்சில் கொடுத்த வரவேற்பு நன்றாக இருந்தது. பின்னர், ஒருநாள் ஓய்வுக்கு பிறகு கேரளம் வந்தடைந்தேன்" என்றார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொல்லத்தில் உள்ள கருநாகப்பள்ளியில் உள்ள எமிரேட்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் அருண் குமார் பணியாற்றி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |