ரஜினி, விஜய், அஜித் மௌனம் காப்பது என்? இயக்குநர் அமீர் ஆவேசம்
ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஒளிப்பதிவு திருத்த சட்டம் குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒளிப்பதிவு சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வருவதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் திரைத்துறைத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் முன்னணி இயக்குநர்களான கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழ்நாடு அரசும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
[19XDKW ]
இந்நிலையில், முக்கிய இயக்குநர்கள் பங்கேற்ற இணையவழி விவாதத்தில் பேசிய இயக்குநர் அமீர், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சட்ட திருத்தம் குறித்து கவலைப்படும் நிலையில், முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் கவலைப்படவில்லை என விமர்சித்தார்.
சட்டத் திருத்தத்திற்கு எதிராக கருத்துக் கூறிய சூர்யாவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தபோது கூட, சூர்யாவுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என ஆதங்கப்பட்டார்.
அனைத்து வாரியங்களையும் அரசே ஏற்று நடத்தினால், இது அதிபர் ஆட்சியாக மாறிவிடும் எனக் கூறிய அமீர், சென்சார் போர்டு போன்று தன்னாட்சி அதிகார அமைப்புகளும் செயல்பட வேண்டும் என்றார்.
ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக பேசிய இயக்குநர் பாரதிராஜா, கருத்து சரியா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், இந்த சட்டத் திருத்தத்தை தடுத்து நிறுத்த மிகப்பெரிய போராட்டம் தேவை என்றும் கூறினார்.
ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதா, இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில், இதற்கு கடுமையான கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.