தீப்பற்றி எரிந்த அடுக்குமாடிக் குடியிருப்பு... ஹீரோக்களாக களமிறங்கிய புலம்பெயர்ந்த இளைஞர்களின் துணிச்சல்
பிரான்சில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றிய நிலையில், புலம்பெயர்ந்த இளைஞர்கள் சிலர் துணிந்து அந்த வீட்டிலிருப்பவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.
பிரான்சின் Nantes நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.
உடனே அருகிலுள்ள மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, நடப்பதை பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர்.
குழந்தை ஒன்றும் அந்த வீட்டில் சிக்கியிருந்த நிலையில், அப்பகுதியில் வாழும் புலம்பெயர்ந்த இளைஞர்கள் சிலர், சட்டென ஜன்னல்களைப் பிடித்து ஏறி, அந்த வீட்டிலிருந்தவர்களை மீட்டுள்ளனர்.
தரையில் மெத்தைகள் விரிக்கப்பட, ஆறு மாதக் குழந்தையை கீழே வீசவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தை படுகாயமடைந்தாலும், இப்போது அதன் நிலைமை சீரடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீரதீரச் செயலை மக்கள் பெரிதும் பாராட்டியுள்ள நிலையில், தீப்பிடித்த வீட்டிலிருந்த அந்த குடும்பத்தைக் காப்பாற்றியவர்களில் மூவர் புலம்பெயர்ந்தோர் என்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு முகவரியிட்டு, ஒன்லைன் மனு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு, இதேபோல் பாரீஸிலுள்ள கட்டிடம் ஒன்றின் நான்காவது மாடியிலிருந்து ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை, மாலியைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரான Mamoudou Gassama என்பவர் துணிச்சலாக மீட்டதும், பின்னர் அவருக்கு பிரான்ஸ் குடியுரிமையும், வீரப் பதக்கம் ஒன்றும் பிரான்ஸ் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.