தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு மகத்தான பணி! கனடாவில் பாராட்டு பெற்ற இந்தியர்... அவர் யார் தெரியுமா?
இந்திய கணிதவியாளர் ஒருவரின் உன்னதமான பணிக்கு கனடா நாடாளுமன்றத்தில் பாராட்டு கிடைத்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மேப்பிள் ரிட்ஜ் மற்றும் பிட் மெடோஸின் பாராளுமன்ற உறுப்பினர் மார்க் டால்டன், கனேடிய பாராளுமன்றத்தில் தனது ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டத்தில் கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்ட கல்வித் திட்டங்கள் குறித்த கணக்கை வெளியிட்டார்.
அப்போது ஏழை எளிய மாணவர்களுக்கு உதவுவதில் 'சூப்பர் 30' என்ற திட்டம் உண்மையில் ஊக்கமளிக்கும் என்றும் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் இந்தியாவின் உயரிய நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்பினை இந்த திட்டம் ஏற்படுத்திதருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேப்பிள் ரிட்ஜில் வசிக்கும் பிஜு மேத்யூ, பீகாரில் பிறந்த கணிதவியலாளர் குமார் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார், இது கல்வியாளர்களுக்கு ஒரு சிறந்த ஊக்கமளிக்கும் வாசிப்பு என்றும் அந்த புத்தகத்தை படிக்குமாறு டால்டன் மக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான இந்த எழுச்சியூட்டும் பணி கல்விக்கு வெற்றிகரமான பாதையை உருவாக்கும் ஒரு முன்மாதிரி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த, 37 வயதானவர் ஆனந்த் குமார். கணித ஆசிரியரான இவர், 2002-ஆம் ஆண்டு முதல் ’சூப்பர் 30’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம், பீகாரில் உள்ள மிகவும் ஏழை மாணவர்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்தி வெற்றி பெற வைப்பது மட்டுமல்லாமல் ஒரு வருடத்துக்கான அவர்களின் செலவையும் அவரே ஏற்றுகொள்கிறார்.