பிரான்சில் புலம்பெயர்ந்தோரை 15 நிமிடத்துக்கு தாங்களும் சாதாரண மனிதர்கள்தான் என உணர வைத்த நிகழ்வு
தொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஒரு குழுவினர், மாதத்தில் ஒரு நாள் பாரீஸில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி, புலம்பெயர்ந்தோருக்கு இலவசமாக முடி வெட்டி விடுகிறார்கள்.
ஆறு பேர் கொண்ட சிகையலங்காரக் கலைஞர்கள் குழுவில், தங்களுக்கு முடி வெட்ட இந்த புலம்பெயர்ந்தோர் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.
பாரீஸிலுள்ள பூங்கா ஒன்றில், ஒரு 100 இளைஞர்களும் சிறுவர்களுமாக சிலர் வரிசையில் நிற்கிறார்கள்.
அவர்களுக்கு எதிரே, ஆறு பேர் கையில் சீப்பும் கத்திரியுமாக நிற்கிறார்கள்.
எனக்கு அவர் வேண்டும் என, தனக்கு எதிரே நிற்கும் ஒருவரைக் கைகாட்டுகிறான் ஒரு சிறுவன்.
என்ன நடக்கிறது அங்கே?
Wilson Migrants Solidarity group என்னும் ஒரு குழுவினர், மாதத்தில் ஒரு நாள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி, புலம்பெயர்ந்த, இன்னமும் தங்கள் புகலிடக்கோரிக்கை அங்கீகரிக்கப்படாத புலம்பெயர்ந்தோருக்கு இலவசமாக முடி வெட்டி விடுகிறார்கள்.
ஆறு பேர் கொண்ட சிகையலங்காரக் கலைஞர்கள் குழுவில், இந்த புலம்பெயர்ந்தோர் தங்களுக்கு முடி வெட்ட, யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த பிள்ளைகளுக்கு, எல்லாமே அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டு திணிக்கப்படுகிறது, எங்கே தூங்குவது, என்ன சாப்பிடுவது, எப்போது சாப்பிடுவது என...
ஆனால், அவர்களும் ஒரு 15 நிமிடங்கள் சாதாரண மனிதர்களாக உணர்ந்து, தங்களுக்கு யார் முடி வெட்டுவது, என்ன ஸ்டைல் வேண்டும், என தாங்களே முடிவு செய்வதற்காக இப்படிச் செய்கிறோம் என்கிறார் Wilson Migrants Solidarity group குழுவில் ஒருவரான Marion Collet.
பிப்ரவரி மாதம் துவங்கி இந்த சேவையைச் செய்து வருகிறது Wilson Migrants Solidarity group குழு.
இன்னொரு விடயம் என்னவென்றால், முடி வெட்டுபவர்களில் பலரும் புலம்பெயர்ந்தோர் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள்தான்! அவர்களுடன் பாரீஸிலுள்ள சிகையலங்காரக் கலைஞர்களும் இணைந்து, தங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த சேவையில் பங்கேற்கிறார்கள்.
இவர்கள் பயன்படுத்தும் கத்திரி, சீப்பு போன்ற பொருட்களில் சில கூட சில நிறுவனங்கள் தானமாகக் கொடுத்ததுதான்.
தங்கள் சிகையலங்காரத்தையும், சிகையலங்காரக் கலைஞரையும் தேர்ந்தெடுக்கும்போது உண்மையாகவே அந்த பிள்ளைகள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிகிறது.