சுவிஸ் வங்கிகளில் இந்திய பணம்... 14 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரிப்பு
சுவிஸ் வங்கிகளில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்கள் முதலீடு செய்துள்ள பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக, சூரிச்சை மையமாகக் கொண்டு செயல்படும் சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.
அவ்வகையில், 2021இல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள பணம், 3.83 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்.
சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் சேமிப்பு தொகை குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் மொத்த வைப்பு தொகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அந்தவகையில் ஒரே ஆண்டில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த தொகை கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை என்பதும் தெரியவந்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்களின் தரவுகள், தனிநபர்களின் வங்கி கணக்குகள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகள் உள்பட அனைத்து வகையான நிதிகளையும் கணக்கில் கொண்டு தான் இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் முழுவதும் கருப்புப்பணம் என்று கருத முடியாது என்றும், வரி மோசடி செய்யும் நபர்களாக அவர்களை கருத முடியாது என்றும் சுவிஸ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கிக்கணக்குகள் குறித்த தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் நடைமுறை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விரிவான தகவல்கள் இந்திய வரி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது என்பதும், நிதி மோசடி செய்பவர்கள் என சந்தேகம் கொள்ளும் இந்தியர்கள் பற்றிய முழு விவரங்களையும் சுவிட்சர்லாந்து அரசும் சுவிட்சர்லாந்து வங்கிகளும் இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.