தன் பார்வையை இழந்துகொண்டே வரும் ஒரு இந்திய கனேடியர்... தனக்கு உதவிய உலகுக்கு செய்துள்ள சிறிய பதிலுதவி
பிரசன்னா ரங்கநாதனுக்கு கண் பார்வையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது.
ஒரு கட்டத்தில் கண் பார்வையை இழக்கும் நிலை ஏற்பட்டபோது, பார்வையற்றோருக்கான கனேடிய தேசிய நிறுவனம்தான் (Canadian National Institute for the Blind - CNIB) அவருக்கு உவியுள்ளது.
தனக்கு உதவிய உலகுக்கு, குறிப்பாக கனடாவுக்கு, அதிலும் குறிப்பாக பார்வையற்றோருக்கான கனேடிய தேசிய நிறுவனத்துக்கு ஒரு சிறிய பதிலுதவி செய்ய முடிவு செய்தார் பிரசன்னா (41).
இது பிரசன்னாவின் கதை...
இந்தக் கதையில் முக்கிய பாத்திரம் பிரசன்னா என்றாலும், அவர் கதாநாயகன் அல்ல! கதாநாயகன், அல்லது கதாநாயகி என்று சொல்லலாம், அது பிரசன்னாவின் தாயாகிய பிரேமா ரங்கநாதன் (74)!
50 ஆண்டுகளுக்கு முன், திருமணமாகி இந்தியாவிலிருந்து கனடாவின் Saskatoonஇலுள்ள Regina நகருக்கு வந்தபோது, பிரேமாவுக்கு சுடுதண்ணீர் வைக்கக்கூட தெரியாதாம். அதற்குப் பிறகு தானே சமையல் கற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளார் பிரேமா.
இன்று 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய சமையல் வகைகள் குறித்து ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளார் அவர்.
தென்னிந்தியாவிலிருந்து வந்த என் தாய், எங்கள் இந்தியக் கலாச்சாரத்தை எங்களுடன் கதைகளாக பகிர்ந்துகொண்டபோது, அவற்றை தென்னிந்திய உணவு வகைகள் மூலமாக பகிர்ந்துகொள்ளத் தவறவில்லை என்கிறார் பிரசன்னா.
ஆக, தங்களுக்குத் தெரிந்த சமையல் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தர விரும்பிய பிரேமா, தன் மகனுடைய வற்புறுத்தலின் பேரில் சமையல் ரெசிபிகளை புத்தகமாக்க முடிவு செய்திருக்கிறார்.
பிரச்சினை என்னவென்றால் பிரசன்னாவைப் போலவே அவருக்கும் கண்களில் பிரச்சினை, குறிப்பாக எழுதுவதற்கு. ஆகவே, தனது மகனுடைய உந்துதலின் பேரில், தோழியான சாமுண்டீஸ்வரி செல்வராஜ் துணையுடன் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.
புத்தகத்தின் பெயர், Made with Prema. பிரேமா என்பதற்கு அன்பு என்று பொருள், ஆக, அன்புடன் சமையல் என்றும் வைத்துக்கொள்ளலாம், அல்லது பிரேமாவுடன் சமையல் என்றும் பொருள்படுத்திக்கொள்ளலாம்.
முக்கியமான விடயம் என்னெவென்றால், Made with Prema புத்தகத்தின் மூலம் வரும் லாபம் முழுவதையும், தங்களுக்கு பார்வை பிரச்சினை மோசமடைந்தபோது உதவிய கனேடிய தேசிய நிறுவனத்துக்கே கொடுப்பதென முடிவு செய்துள்ளது ரங்கநாதன் குடும்பம்.
இனி எனக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன், இது திருப்பிக் கொடுப்பதற்கான நேரம் என்கிறார் பிரசன்னா!