அகதியாக கனடா வந்த பதின்ம வயது சிறுவன்... குடும்பத்துடன் இணைய நீண்ட காலமாக காத்திருக்கும் அவலம்
பதின்ம வயது சிறுவன் ஒருவன் அகதியாக கனடாவுக்கு வந்த நிலையில், தன் குடும்பத்தினரை சந்திக்க ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் அவல நிலை அவனுக்கு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூலைச் சேர்ந்த ஹுமாயூன் சர்வார், நியூயார்க்கில் நடைபெறும் ஒரு மாதிரி ஐக்கிய நடுகள் மாநாட்டிற்காக தனது பள்ளியால் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், அந்த பயணம் தன் பெற்றோரிடமிருந்து தன்னை நீண்ட காலத்துக்கு பிரிக்கப்போகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் அமெரிக்கா சென்ற விடயம் தொலைக்காட்சிகாட்சிகளில் வெளியாக, கூடவே வந்தது தொல்லையும்.
காபூலில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றும் ஹுமாயூனின் பெற்றோரை மடக்கிய மர்ம நபர்கள் இருவர், அவன் எதற்காக அமெரிக்கா சென்றுள்ளான், அவனது குடும்பத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு என்று கேள்விக்கணைகளால் அவரை துளைத்தெடுத்துள்ளனர்.
அத்துடன், ஹுமாயூன் நாடு திரும்பியதும் தாலிபான்களால் கடத்தப்படுவான் என மிரட்டல் கடிதம் ஒன்றும் அவனது பெற்றோருக்கு வந்துள்ளது. பயந்துபோன ஹுமாயூனின் பெற்றோர், அவனை கலிபோர்னியாவிலிருக்கும் ஒரு உறவினர் வீட்டுக்கு அனுப்பி கொஞ்ச நாள் வைத்துவிட்டு, அங்கிருந்து கனடாவில் வாழும் தன் அக்கா கணவர் வீட்டுக்கு சென்றுவிடும்படி கூறியுள்ளனர்.
கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் உதவியுடன் தன்னந்தனியாக கனடா வந்த ஹுமாயூனுக்கு புகலிடம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு 2016ஆம் ஆண்டு புகலிடம் பெற்ற ஹுமாயூன், தன் பெற்றோரை கனடா அழைத்துவர முயன்றபோது, அவனுக்கு ஆண்டுக்கு 40,000 டொலர்கள் வருவாய் இருந்தால்தான் அது சாத்தியம் என்பது தெரியவந்துள்ளது.
தானே வாழ்வதற்கு அக்கா கணவனின் தயவை நாடியிருக்கும் நிலையில், அவ்வளவு வருவாய்க்கு அவன் எங்கே போவான்? 2017ஆம் ஆண்டு, ஹுமாயூனின் பெற்றோர் மற்றும் சகோதரியை மனிதநேய மற்றும் கழிவிரக்கத்தின் அடிப்படையில் கனடா அழைத்துவர அவன் அளித்த விண்ணப்பத்தை புலம்பெயர்தல் துறை ஏற்றுக்கொண்டது.
ஆனால், இன்னமும் அந்த விண்ணப்பத்தின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காபூலில் பெற்றோர் பயத்துடன் காத்திருக்க, கனடாவில் பெற்றோருடன் இணையும் நாளுக்காக காத்திருக்கிறான் ஹுமாயூன்!