பிரித்தானியா வரும் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் தம்பதியர்: பிரபல ஊடகம் கடும் விமர்சனம்
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் தம்பதியர் திருமணத்துக்குப் பின், அடுத்த பார்ட்டிக்காக இங்கிலாந்துக்கு வருகிறார்கள்.
இந்நிலையில், ஏற்கனவே இந்தியாவில் ஆடம்பரமாக செலவழித்தாயிற்று, இப்போது பிரித்தானியாவுக்கு வேறு வருகிறார்களா என்னும் ரீதியில் பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளது.
பிரபல ஊடகம் கடும் விமர்சனம்
பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், மருந்தகத்துறை ஜாம்பவான் குடும்ப வாரிசான ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் இந்தியாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, பார்ட்டி ஒன்றிற்காக இங்கிலாந்திலுள்ள Slough என்னுமிடத்துக்கு வருகிறது அம்பானி குடும்பம்.
உலகின் மிக ஆடம்பரமான, நீண்ட திருமண விழாக் கொண்டாட்டங்கள், ஆறு மாதங்களாகியும் முடிந்தபாடில்லை என்கிறது பிரபல பிரித்தானிய ஊடகமான தி சன்.
தி சன் பத்திரிகையின் இணை ஆசிரியரான Clemmie Moodie, இந்த அபத்தமான சர்க்கஸ் இப்போது பிரித்தானியாவுக்கு வருகிறது என்கிறார்.
பல மில்லியன் இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இந்தியர்களில் சுமார் 60 சதவிகிதம்பேர் நாளொன்றிற்கு வெறும் 2.50 பவுண்டுகள் மட்டுமே சம்பளம் வாங்குகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், அம்பானி குடும்பம், இந்தியாவை உலக வல்லரசாக காட்டிக்கொள்வதற்காக, பாருங்கள், நாங்கள் எவ்வளவு பணக்காரர்கள், மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்த ஆடம்பரம் எல்லாம் என்கிறார் Clemmie.
தன்னலமற்ற பிரபலங்கள்
இதற்கிடையில், தங்களை தன்னலமற்றவர்கள், அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள், ஏழைகளுக்கு உதவுபவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு உதவுபவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என தங்களை அழைத்துக்கொள்பவர்கள் எல்லாம் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்கள் என்கிறார் Clemmie.
ஏழை நாடுகளுக்கு உதவும் நோக்கில் G8 உச்சி மாநாடு நடத்தினார் முன்னாள் பிரித்தானிய பிரதமரான டோனி பிளேர்.
UNICEF நல்லெண்ண தூதவராக நியமிக்கப்பட்டவர் கேட்டி பெர்ரி.
சுற்றுச்சூழல் ஆர்வலராக தன்னைக் காட்டிக்கொள்பவர் பாடகி ரிஹானா.
வாரி வழங்கும் வள்ளலாக தன்னைக் காட்டிக்கொள்பவர் கிம் கார்டேஷியன்.
இவர்களுடன், தன்னை உலக வறுமையை எதிர்த்து பிரச்சாரம் செய்பவராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் காட்டிக்கொள்ளும் இளவரசர் ஹரியும் அம்பானி குடும்ப பார்ட்டியில் கலந்துகொள்ள இருப்பது வேடிக்கைதான் என்கிறார் Clemmie.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |