கோமாவில் இருந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய முதல்வர் விஜய் - கண்கலங்கிய அமைச்சர் ஆனந்த்
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான என். ஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், சில வருடங்களுக்கு முன்னர் கோமாவில் இருந்த பெண்ணை முதல்வர் விஜய் காப்பாற்றிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
கோமாவிற்கு சென்ற பெண்
இது குறித்து பேசிய அவர், "திருநெல்வேலியை சேர்ந்த பழனிசெல்வி என்ற பெண் பி.டெக் படித்து விட்டு, சென்னையில் வந்து ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சென்னைக்கு வந்து 15 நாட்கள்தான் இருக்கும்.

காலையில் 6 மணிக்கு வேலைக்கு செல்லும் போது கார் ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள்.
தலைவர் தளபதிக்கு இது பற்றி 2 நாள் கழித்து தகவல் கிடைத்தது. உடனே என்னை அழைத்து மருத்துவமனைக்கு சென்று அந்த பெண் தற்போது எப்படி இருக்கிறார் என பார்த்து விட்டு வா என அனுப்பினார்.
மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது, அந்த பொண்ணு கோமாவிற்கு சென்று விட்டது. இங்க வந்து 3 நாள் ஆகி விட்டது. அவங்க பெற்றோர் வந்திருக்காங்க. அவங்களுக்கு பெரிய வசதி இல்லை எனக்கூறினார்.
எப்படி மேடம் சரி பண்ணிடலாமா எனக்கேட்டபோது, சார் 5 நாட்களிலும் சரி ஆகலாம், 5 வருடம், 10 வருடம் கூட ஆகலாம். அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போக சொல்லுங்க, பணம் கட்டணும்னு சொன்னாங்க.
தலைவர் தான் கட்டப்போறார். பணத்தை கட்டினதும் அந்த பெண்ணை ஆம்புலன்சில் அழைத்துட்டு போனாங்க. ஆம்புலன்ஸ் மருத்துவமனையை விட்டு வெளியே போனதும், அந்த பெண்ணின் அப்பா மட்டும் திரும்பி என்னிடம் வந்து நீங்கள் கோச்சுக்கலைனா ஒன்னு கேட்கலாமா என கேட்டார். என்ன என கேட்டேன்.
திருநெல்வேலியில் என் வீடு குடிசை வீடு. என் பெண்ணை அங்க அழைத்து போய் வைத்திருக்க முடியாது. ஒரு 15 நாள் வேற ஒரு சிறிய மருத்துவமனையில் வைத்திருந்தால், நான் வாடகைக்கு வேற வீடு பார்த்துவிட்டு, அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்தது கூட்டிட்டு போய்டுவேன் என கூறினார்.
ஏங்க இதை முதலிலே சொல்லக்கூடாதா எனக்கேட்ட போது, நான் உங்க கிட்ட வந்து உதவி கேட்கல. நீங்க ஏதோ சமூகவலைத்தளத்தில் பார்த்து வந்து உதவி செய்றிங்க. அதனால தொந்தரவு கொடுக்க கூடாது என சொல்லல எனக்கூறினார்.
இதனை நான் உடனே தளபதி கிட்ட சொல்ல, ஏன் அந்த மருத்துவமனையிலே இருக்கலாமே ஏன் டிஸ்சார்ஜ் செஞ்சீங்க எனக்கேட்டார். திருநெல்வேலில அவங்களுக்கு தெரிஞ்ச மருத்துவமனையில, தெரிஞ்சவங்க மருத்துவரா இருக்காங்க என சொன்னேன்.
சரி எத்தனை வருடம் ஆனாலும் முழு செலவையும் நம்மளே ஏத்துக்கலாம், அவங்க சௌகரியத்திற்கு பன்னட்டும் என சொன்னார்.
அதன் பிறகு திருநெல்வேலி மருத்துவமனையில் 15 நாட்களுக்கு பிறகு கண் விழித்து, அந்த பெண் தற்போது நன்றாக உள்ளது.
ஒரு 10 மாதத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு வந்து அண்ணே என்னை தெரிகிறாதா என கேட்டார். சொல்லுமா என சொன்னேன்.
எனக்கு கல்யாணம் தலைவர பார்த்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு போகணும் என சொன்னார். தலைவர் ஷூட்டிங்ல இருக்காருமா. நீ பத்திரிகையை கொடுத்துட்டு போ. அவர் வந்ததும் நான் சொல்றேன் என சொன்னேன்.
நான் உயிரோட இருக்க காரணமே தலைவர் தான் அவர் கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு தான் கல்யாணம் செய்வேன் எனக்கூறினார்.
இரவோடு இரவாக கார் ஒட்டி வந்த விஜய்
அவர் வர 15 நாட்கள் ஆகும், நீ திருநெல்வேலியில் இருந்து வந்திருக்க. அடுத்த வாரம் கல்யாணம்னு சொல்ற போயிட்டுவா மா என எவ்வளவோ சொன்னேன்.

எங்க மாமனார், மாமியார், என் கணவர் ரொம்ப தங்கமானவங்க. எப்போ தலைவரை பார்த்துட்டு வர்றியா அதுவரைக்கும் நாங்க காத்திருக்கோம் என சொல்லிட்டாங்க.
இங்கயே அவங்க அப்பாவோட ஒரு ஒரு அறை எடுத்து தங்கிட்டாங்க. நான் அங்கையும் போய் சொல்லி பாத்தேன் அவங்க கேட்கல.
தலைவர் கிட்ட சொன்னப்போ, எப்படியாவது சொல்லி அனுப்பிடுங்க என சொன்னார். எவ்வளவோ சொல்லியும் கேட்கல சார் என சொன்னேன்.
அப்போது ஆந்திரால இருந்தாங்க, இரவோட இரவா அவங்களே தனியாக காரை ஓட்டி வந்து அந்த பெண்ணை ஆசிர்வதித்து விட்டு பரிசு பொருள் கொடுத்து அனுப்பி வைத்தவர் தான் நம் தலைவர் தளபதி என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
இது மாதிரியான விஷயங்கள் நிறைய இருக்கிறது. இதனை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி ஒரு நல்ல மனிதரை தான் மாண்புமிகு முதலமைச்சராக தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |