குழந்தைகளை உணவாக்கிய மூதாதையர்கள்... அதிரவைக்கும் புதிய கண்டுபிடிப்பு
அதிர்ச்சி தரும் ஒரு கண்டுபிடிப்பாக, ஸ்பெயின் நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 850,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித மூதாதையர்கள் குழந்தைகளை உணவாக்கியதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
குழந்தையின் கழுத்து எலும்பு
வடக்கு ஸ்பெயினின் அட்டாபுர்காவில் உள்ள கிரான் டோலினா குகை தளத்தில் இருந்தே சில்லிட வைக்கும் இந்த ஆதாரங்களைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
அந்த குகையில் இரண்டு முதல் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தையின் கழுத்து எலும்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர், அதில் இருந்த அறிகுறிகள் பச்சிளம் சிறார்கள் உணவாக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிப்பதாக கண்டறிந்துள்ளனர்.
கழுத்து எலும்பில் உள்ள அடையாளங்கள் அந்த பச்சிளம் குழந்தை தலை துண்டிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பதாக மனிதர்களின் பழங்காலச் சூழலியல் மற்றும் சமூகப் பரிணாம வளர்ச்சிக்கான கேட்டலான் கல்வி நிலையத்தில் குழு ஒன்று உறுதி செய்துள்ளது.
குறிப்பாக, குழந்தையின் உடல் பாகங்கள் ஹோமோ சேபியன்கள் மற்றும் நியாண்டர்தால்கள் இருவரின் கடைசி பொதுவான மூதாதையராக நம்பப்படும் Homo antecessor-ஐ சேர்ந்தவை என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
மனிதர்களில் நரமாமிசம்
மேலும், தலையை துண்டாக்குவதற்கான முக்கிய உடற்கூறியல் புள்ளிகளில் முதுகெலும்பில் தெளிவான கீறல்கள் உள்ளன. இது மற்ற இரையைப் போலவே குழந்தையும் பதப்படுத்தப்பட்டதற்கான நேரடி சான்று என அகழ்வாராய்ச்சியின் இணை இயக்குநர் டாக்டர் பால்மிரா சலாடி தெரிவித்துள்ளார்.
ஆரம்பகால மனிதர்களில் நரமாமிசம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், ஒரு குழந்தையை சாப்பிடப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது அசாதாரணமானது என்றே கூறப்படுகிறது.
Homo antecessor மக்கள் 1.2 மில்லியன் முதல் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர். அவர்களின் மூளை அளவு தோராயமாக 1,000 முதல் 1,150 கன சென்டிமீற்றர் வரை இருந்தது, இது இன்றைய மக்களின் சராசரி மூளை அளவான 1,350 கன சென்டிமீற்றரை விட சிறியது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பானது, மூதாதையர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களை உணவு பண்டமாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்ற கருதுகோளை வலுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |