அமெரிக்காவில் அலையில் சிக்கிய மகனைக் காப்பாற்றச் சென்ற இந்தியருக்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவில் இந்தியக் குடும்பம் ஒன்று கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், மகன் அலையில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு அவனைக் காப்பாற்ற கடலில் இறங்கிய தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலையில் சிக்கிய சிறுவன்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (Potti Venkata Rajesh Kumar, 44), குடும்பத்துடன் ப்ளோரிடாவிலுள்ள கடற்கரை ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக, கடலில் விளையாடிக்கொண்டிருந்த ராஜேஷின் 12 வயது மகனை அலை அடித்துச் சென்றுள்ளது.
மகனை அலை அடித்துச் செல்வதைக் கண்டு பதறிய ராஜேஷ், முன்பின் யோசிக்காமல், மகனைக் காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கியுள்ளார். ஆனால், அவரும் கடல் அலைகளில் சிக்கியுள்ளார்.
காப்பாற்ற விரைந்த நபர்
தந்தையும் மகனும் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட Brendon Townsend என்பவர் கடலுக்குள் குதித்திருக்கிறார். ராஜேஷின் மகனை மீட்டு அவனுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்து அவனைக் காப்பற்றிய Brendon, மீண்டும் ராஜேஷைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார்.
ராஜேஷையும் கரைக்குக் கொண்டு வந்துள்ளார் Brendon. ஆனால், அப்போதே அவர் சுயநினைவிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். Brendonம் வேறு சிலரும் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையாம்.
indiatimes
தந்தையும் மகனும் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ராஜேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
ராஜேஷின் மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவனது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு, ராஜேஷின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர அவரது குடும்பத்தினருக்கு உதவுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S. ஜெய்ஷங்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |