20 ஆண்டுகளாக கொத்தடிமை! ரயில் மாறியதால் தடம் புரண்ட வாழ்க்கை..குடும்பத்துடன் இணைந்த நபர்
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்நாட்டில் கொத்தடிமையாக 20 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார்.
தேநீர் குடிக்க இறங்கிய நபர்
ஆந்திராவைச் சேர்ந்த அப்பாராவ் என்ற தொழிலாளி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணித்தபோது தேநீர் குடிக்க இறங்கியுள்ளார்.
பின்னர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறிய அவர், விவரம் அறியாமல் சிவகங்கைக்கு சென்றுள்ளார்.
கடம்பங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த மலைக்கண்ணு எனும் நபர் அப்பாராவை ஆடு மேய்க்க வைத்துள்ளார்.
மலைக்கண்ணு இறந்ததையடுத்து அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவர் அப்பாராவை ஆடு மேய்க்கும் வேலையை செய்ய வைத்து, ஊதியம் இல்லாமல் உணவு மட்டும் கொடுத்துள்ளார்.
20 ஆண்டுகளாக கொத்தடிமை
இவ்வாறாக அப்பாராவ் 20 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறைக்கு இவரைப் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. உடனே விசாரணை நடத்திய நலத்துறையினர் அப்பாராவின் குடும்பத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
பின்னர் அப்பாராவை மீட்ட அதிகாரிகள், அவரின் மகள் மற்றும் மருமகனை வரவழைத்து அவர்களுடன் அப்பாராவை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |