ஒரு பவுண்டரி இல்லாமல் 9 சிக்ஸர் விளாசிய ரஸல்! 38 பந்தில் 68 ஓட்டங்கள் விளாசியும் வீண்
கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.
சபீனா பார்க் மைதானத்தில் நடந்த ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பிரண்டன் கிங், ஷெர்பானே ரூதர்போர்டு
பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டி சபீனா பார்க்கில் நடந்தது.

முதலில் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணியில் கார்ட்டர் 27 (15) ஓட்டங்கள் விளாசி வெளியேற, சரவெடி காட்டிய குயின்டன் டி காக் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரண்டன் கிங், ஷெர்பானே ரூதர்போர்டு கூட்டணி அதிரடியில் மிரட்ட, பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 206 ஓட்டங்கள் குவித்தது.
பிரண்டன் கிங் (Brandon King) 51 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) 28 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணியில் ஹென்ரிக்ஸ் (2), ஜஹான்ஹிர் (0) சொதப்ப, மெக்கென்ஸியும் டக்அவுட் ஆனார். அப்போது களமிறங்கிய அணித்தலைவர் ரோவ்மன் பௌல், கேசி கார்ட்டியுடன் இணைந்து சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
ஆந்த்ரே ரஸல் வாணவேடிக்கை
(பௌல் (Powell) 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் (4 சிக்ஸர்) விளாச, ஹஸ்ஸன் கான் டக்அவுட் ஆனார். கார்ட்டி 27 பந்துகளில் 45 ஓட்டங்கள் (4 சிக்ஸர், ஒரு பவுண்டரி) எடுத்த நிலையில் சாம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அணி 132 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என தடுமாற, ஆந்த்ரே ரஸல் (Andre Russell) தனியாளாக வாணவேடிக்கை காட்டினார்.
அவர் கடைசி ஓவரில் 38 பந்துகளில் 68 ஓட்டங்கள் (9 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழக்க, ஜமைக்கா அணி 20 ஓவர்களில் 201 ஓட்டங்களே எடுத்ததால் பார்படோஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விட்டல் லாவ்ஸ் 20 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்கள் விளாசினார். மிரட்டலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டேனியல் சாம்ஸ் (Daniel Sams) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |