அகதிகளுக்கு இடமளிப்பதா? இளவரசர் சார்லஸ் மீது கோபம் காட்டிய புலம்பெயர்தல் மைய தாக்குதல்தாரி
ஞாயிற்றுக்கிழமை புலம்பெயர்தல் மையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து அதிரவைக்கும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.
அவரது புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை Doverஇல் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் மையம் ஒன்றின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசினார். பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
பெட்ரோல் குண்டுகளை வீசும்போது, அவர் சிரித்துக்கொண்டே குண்டுகளை வீசியதாக சம்பவத்தைக் கண்ணால் கண்ட ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தாக்குதல்தாரி குறித்த விவரங்களும், அவரது புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அவரைக் குறித்து ஏராளமான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது பெயர் Andrew Leak (66), பக்கிங்காம்ஷையரிலுள்ள Wooburn Green என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
இந்த ஆண்ட்ரூ, வெளியில் ஒரு முகமும், சமூக ஊடகங்களில் வேறு முகமும் காட்டியிருக்கிறார். வெவ்வேறு மாஸ்குகளை அணிந்து கொண்டிருக்கும் அவரது புகைப்படங்கள் கிடைத்துள்ளன.
ஒரு முறை, புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று கவிழ்ந்தபோது, அந்த விடயம் அவரை வருத்தமடையச் செய்ததாகவும், அப்போது அவர், பிரித்தானிய அரசு ஏன் அவர்களுக்கு உதவவில்லை என்று கேட்டதாகவும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்த ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால், சமூக ஊடகங்களிலோ, புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
ராஜ குடும்பத்துக்கு எதிரான கருத்துக்களையும் பதிவு செய்துள்ள அவர், இளவரசர் சார்லஸ் தனது வீடுகளில் ஒன்றில் உக்ரைன் அகதிகளை தங்கவைக்கப்போவதாக கூறுகிறார். அது பிரித்தானியர்களுடையது. அப்படியானால், படைவீரர்களும் பொதுமக்களும் வாசலில் படுத்துத் தூங்கவேண்டுமா? அவமானம், ராஜகுடும்பத்துக்கு இப்போதே முடிவு கட்டவேண்டும் என்று பேஸ்புக் இடுகை ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர்.
ஆங்கிலம் தெரியாதவர்களுக்கெல்லாம் அரசு உதவி கிடைக்கிறது என்று கூறி தனது வெறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அரசு அவருக்கு அளித்து வந்த உதவி சமீபத்தில் பாதியாக குறைக்கப்பட்டதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் இறந்துபோனதால் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், பல உடல் நல பிரச்சினைகள் அவருக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அவரது வீட்டை சோதனையிட்ட பொலிசார், அங்கிருந்து பல மின்னணுக் கருவிகளைக் கைப்பற்றியுள்ளார்கள். விசாரணை தொடர்கிறது.