ராஜ குடும்பத்துக்கு அவப்பெயரைக் கொண்டு வந்த இளவரசருக்கு முக்கியத்துவம் கொடுத்த பிரித்தானிய மகாராணியாரின் செயல்
தனது அன்பிற்குரிய கணவரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஒட்டி, இரண்டு அசாதாரண முடிவுகள் எடுத்துள்ளார் பிரித்தானிய மகாராணியார்.
ஒன்று, கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத மகாராணியார், உடல் நலப் பிரச்சினைகள் இருக்கும் நிலையிலும், தன் கணவரின் நன்றியறிதல் கூட்டத்தில் பங்கேற்பதென முடிவு செய்துள்ளார்.
இரண்டாவது, பருவம் எய்தாத ஒரு பெண்ணுடன் பாலுறவு கொண்டதாக வழக்குத் தொடரப்பட்டு, ராஜ குடும்பத்துக்கே அவமானத்தைக் கொண்டு வந்த தனது மகனான இளவரசர் ஆண்ட்ரூவுடன் அவர் அந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
பிரித்தானிய மகாராணியாரின் அருகில் நடந்து வந்த ஆண்ட்ரூவுக்கு, தேவாலயத்தில் முதல் வரிசையில் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம், குறிப்பாக, வருங்கால மன்னரான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மகனான இளவரசர் வில்லியம் ஆகியோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் ஒரு முடிவாக ஆகியுள்ளது.
காரணம், ஆண்ட்ரூ விர்ஜினியா ராபர்ட்ஸ் என்ற பெண்ணுடன் பாலுறவு கொண்டதாக பிரச்சினை எழுந்தபோது, ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறிக்கவைத்ததில் அவர்கள் இருவருக்கும் முக்கிய பங்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மீண்டும் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் மகாராணியார் பங்கேற்பது அவர்களுக்கு விரும்பத்தகாத முடிவாக இருக்கும்தானே!
ஆனால், கணவருடைய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மொத்தக்குடும்பமும் பங்கேற்க வேண்டும் என அவர் விரும்புகிறார் போலும்.
ஆனாலும், ராஜ குடும்ப உறுப்பினர்களில், இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மட்டுமே இளவரசர் பிலிப்பின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.