பிரித்தானியர்களுக்கு தடை விதிக்கவேண்டும்- ஜேர்மனி பிடிவாதம்; பிரான்ஸ் ஆதரவு
பிரித்தானிய பயணிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவதை தற்காலிகமாக தடை செய்யவேண்டும் என ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் வலியுறுத்தி வருகிறார்.
பிரித்தானிய பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டாலும், போடாவிட்டாலும், அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அனுமதிக்கப்படக்கூடாது என மெர்கல் வலியுறுத்துகிறார்.
மேலும், டெல்டா வகை கொரோனா தொற்று எண்னிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, பிரித்தானியாவை கலைக்குரிய நாடாக (Country of Concern) அறிவிக்கப்படவேண்டும் என கூறுகிறார்.
ஏஞ்சலா மெர்கலின் இந்த முடிவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஆனால், பல மத்தியதரைக் கடல் நாடுகள் அத்தகைய கட்டுப்பாடுகளை எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீஸ், சைப்ரஸ், மால்டா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் தங்கள் பெரிய சுற்றுலா பொருளாதாரங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான தடையை மீறக்கூடும் என கூறப்படுகிறது. ஸ்பெயினும் தனது சொந்த எல்லைக் கொள்கையை அமைப்பதில் பிடிவாதமாக உள்ளது.
மால்டா மற்றும் ஸ்பானிஷ் பாலேரிக் தீவுகள் புதன்கிழமை முதல் பிரித்தானியாவின் 'பசுமை பட்டியலில்' சேரும் என்பதால், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஏற்கெனவே தங்கள் கோடைகால பயணங்களுக்கு செல்ல இந்த இடங்களை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது போன்ற பிரச்சினைகளுக்கு இடையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் வெள்ளிக்கிழமை ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேச உள்ளார். அப்போது, மெர்கலின் முடிவிலிருந்து பின்வாங்கச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.