அப்பாவி பொதுமக்களை பழிவாங்குவதை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்
திமுக அரசு இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் திமுக அரசு அப்பாவி பொதுமக்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அவரது பதிவில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான தாயார் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். தற்போது, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களைத் தேடி அலைகிறார்கள்.
திமுக ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு, இனி இதுவே முழு நேர வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், தங்கள் ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்?
திமுக அரசு, இந்த உளுத்துப் போன காரணங்களைச் சொல்லி பொதுமக்களைப் பழிவாங்குவதை நிறுத்திவிட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்யும் பணிகளில் உடனடியாக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான தாயார் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். தற்போது, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களைத் தேடி அலைகிறார்கள். திமுக ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு, இனி இதுவே முழு நேர வேலையாக இருக்கும் எனத்… pic.twitter.com/DHEFo6WRai
— K.Annamalai (@annamalai_k) January 14, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |