பிரித்தானியர்களுக்கு இடமில்லை... பிரெஞ்சு பனிச்சறுக்கு மையங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பனிச்சறுக்கு சீசனின்போது பிரான்சில் வேலை செய்வது பிரித்தானியர்களிடையே நீண்ட காலமாக மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு விடயமாகும். ஆனால், அதற்கும் பிரெக்சிட்டால் இப்போது பிரச்சினை உருவாகியுள்ளது.
வேலை அளிக்கும் பல நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் பிரெஞ்சு வாழிட உரிமம் கொண்டவர்களுக்கு மட்டுமே பனிச்சறுக்கு மையங்களில் வேலை என அறிவித்துவிட்டன. பிரெஞ்சு பனிச்சறுக்குத் துறையில் உள்ள பணி வழங்குவோர், 2021/22க்கான பணியிடங்களுக்கு விளம்பரம் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் பிரெஞ்சு வாழிட உரிமம் கொண்டவர்கள் தவிர்த்து மற்ற பிரித்தானியர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றே அவர்கள் தெரிவித்துவிட்டார்கள்.
பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடைந்ததிலிருந்தே, பிரித்தானியர்கள் பிரான்சில் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு விசாவும் வேலை செய்வதற்கான உரிமமும் தேவைப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், தற்காலிக வேலை செய்ய விரும்புவோரிடம் அவை இருக்க வாய்ப்பில்லை என்பதால், பணி வழங்குவோர் பிரித்தானியர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வரவில்லை. இதனால் 25,000 பிரித்தானிய தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என வர்த்தக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு... https://www.thelocal.fr/20210702/eu-citizens-only-why-brits-are-at-the-back-for-the-queue-for-ski-season-jobs-in-france/