பிரித்தானியாவில் இலவச PCR பரிசோதனைகள் இனி அனைவருக்கும் கிடையாது: விரைவில் வெளியாகவிருக்கும் அறிவிப்பு
கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று கூறும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலவச PCR கொரோனா பரிசோதனைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட உள்ளன.
அதாவது, எளிதில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள மக்கள், மருத்துவமனைகள் மற்றும் அதிக அபாய இடங்கள் தவிர்த்து மற்றபடி தாமாக கொரோனா பரிசோதனைகள் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு இனி இலவச PCR பரிசோதனை கிடையாது.
அத்துடன், கொரோனா தொற்றிய ஒருவருடன் தொடர்பிலிருந்தவர்கள் PCR முறையில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என தற்போது விதி உள்ளது. அந்த விதியும் இனி நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு பயணம் செய்யவேண்டுமானால் PCR முறையில் கொரோனா பரிசோதனைகள் கட்டாயம் என்றிருந்த நிலையில், அதற்காக ஒருவர் 100 பவுண்டுகள் செலவிடவேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, இப்போது இலவச பரிசோதனைகள் முடிவுக்கு வரும் நிலையில், தனக்கு கொரோனா உள்ளதா என்பதை ஒருவர் அறிந்துகொள்ள விரும்பினால், அவர் 100 பவுண்டுகள் வரை தன் கையிலிருந்து இனி செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இந்நிலையில், இலவச பரிசோதனைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அறிவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இலவச பரிசோதனை இனி இல்லை என்னும் முடிவு, எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என அவர்கள் எச்சரித்திருந்தார்கள்.
அத்துடன், தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கொரோனா தொற்றை தவிர்க்க விரும்புவோருக்கு இந்த இலவச பரிசோதனைகளை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவு கடினமான சூழலை உருவாக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.