பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளின் கிறிஸ்துமஸ் பயணத்திட்டங்களை கனவாக்கிய பிரான்ஸ் நாட்டின் அறிவிப்பு
வரும் சனிக்கிழமை முதல், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு அத்தியாவசியமற்ற பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, இனி பிரித்தானிய குடிமக்கள் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்வதற்கோ அல்லது பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் செல்வதற்கோ அத்தியாவசிய காரணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதியளிக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி என்றார்.
மக்கள் சுற்றுலா மற்றும் தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்ள இயலாது என்றார் அவர்.
அதே நேரத்தில், பிரெஞ்சு குடிமக்களும், ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்களும் பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் திரும்ப தடையில்லை.
மேலும், பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வரும் பயணிகள், பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், ஆன்டிஜன் அல்லது பிசிஆர் வகை கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும்.
அத்துடன், அவர்கள் பிரான்சுக்குள் நுழைந்ததும், கட்டாயம் தங்களை ஏழு நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும்.
இந்த ஏழு நாட்களில், அவர்கள் பிரான்சுக்குள் நுழைந்து 48 மணி நேரத்திற்குப்பின் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவரும்பட்சத்தில், அவர்கள் தனிமைப்படுத்துதலிலிருந்து வெளியேறலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்சின் இந்த திடீர் அறிவிப்பினால், கிறிஸ்துமஸ் பண்டிகையை பிரான்சில் கொண்டாட திட்டமிட்டிருந்த மற்றும், பனிச்சறுக்குக்கு செல்ல திட்டமிட்டிருந்த பிரித்தானியர்களின் திட்டங்கள் கனவாகிப்போயுள்ளன.