இங்கிலாந்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
இங்கிலாந்தில் பள்ளிகள் திறப்பது குறித்து குழப்பமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என கவலைப்பட, R எண் அதிகமானாலும் பரவாயில்லை பள்ளிகளைத் திறக்கவேண்டும் என சில அரசியல்வாதிகள் குரல் கொடுக்க, சுகாதாரத்துறையினரோ மருத்துவமனைகள் நிரம்பி வழியப்போகிறது என அச்சப்பட, பள்ளிகள் திறப்பு குறித்து குழப்பமான சூழலே நிலவுவதாக கேபினட் அலுவலக அமைச்சரான Michael Gove ஒப்புக்கொண்டுள்ளார்.
அடுத்த வாரமும் பள்ளிகள் அனைத்தையும் திறப்பது சாத்தியமல்ல என தான் அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல மில்லியன் மாணவ மாணவிகள் தொடர்ந்து வீடுகளில் இருந்தவண்ணம்தான் படிப்பை கொஞ்ச நாட்களுக்கு தொடரவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.
11 மற்றும் 13 வயதுள்ள மாணவ மாணவிகள், முக்கியப்பணியாற்றுவோரின் பிள்ளைகள் ஆகியோர் மட்டுமே ஜனவரி 4ஆம் திகதி முதல் பள்ளிக்குச் செல்வார்கள் என்றும், அனைத்து ஆரம்ப பள்ளி மாணவ மாணவியர்களும் (primary school children) வழக்கம் போல பள்ளிக்கு செல்லலாம் என்றும் கூறியுள்ளார் அவர். (நமது பள்ளிகளில் காணப்படும் ஆரம்பப் பள்ளி என்பதற்கும், மேலை நாடுகளில் உள்ள ஆரம்பப் பள்ளி என்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.)
புது வகை கொரோனா பரவல் காரணமாக, 4ஆவது மட்ட கொரோனா பொது முடக்க பகுதிகளில் வாழும் மாணவ மாணவிகள் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதி வரைக்கும் வீடுகளில்தான் இருக்கவேண்டியிருக்கும் என ஒரு செய்தி உலவுவதைத் தொடர்ந்து, பள்ளிகள் திறப்பு குறித்த திட்டம் மீளாய்வு செய்யப்படவேண்டியிருப்பதாகவும் Mr Gove தெரிவித்துள்ளதையடுத்து பள்ளிகள் திறப்பது மேலும் தாமதமாகலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

