திருமணமாகி தாம்பத்திய உறவுக்கு முன் பிரிந்த தம்பதியர்: கனேடிய நீதிமன்றம் ஒன்று அளித்த வித்தியாசமான தீர்ப்பு
பிரிட்டிஷ் கொலம்பியாவில், அரசு அலுவலகம் ஒன்றில் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட ஒரு சீக்கிய தம்பதியர், மத ரீதியில் முறைப்படியான திருமணத்துக்காக காத்திருக்கும் காலகட்டத்தில் பிரிந்துள்ளார்கள்.
பிரிவைத் தொடர்ந்து, தங்கள் திருமணம் செல்லாது என்று அறிவிக்குமாறு கோரி அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
ஆனால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தாம்பத்திய உறவில் ஈடுபட இயலாத நிலை இருந்தால் மட்டுமே திருமணத்தை செல்லாது என அறிவிக்க இயலும் என கீழ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துவிட்டது.
ஆகவே, அந்த தம்பதியர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் பல விடயங்கள் தெரியவந்தன.
அதாவது, அந்த பெண், 2017ஆம் ஆண்டு ஒரு மாணவியாக, கல்வி கற்பதற்காக கனடா வந்துள்ளார். அப்போது அவர் சந்தித்த நபருடன் காதலில் விழுந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வாழ விரும்பியுள்ளார்கள். ஆனால், திருமணத்துக்கு முன் ஒரே வீட்டில் வாழ அவர்களது மதம் அனுமதிக்காது என்பதால், அரசு அலுவலகம் ஒன்றில் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.
ஆனால், அவர்கள் சீக்கிய முறைப்படி குருத்துவாரா ஒன்றில் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே அவர்கள் தாம்பத்திய உறவு கொள்ளமுடியும். ஆகவே, ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், அவர்களுடன் வேறு சில நண்பர்களும் தங்கியிருக்க, இந்த தம்பதியரும் நண்பர்கள் போல வெவ்வேறு அறைகளில்தான் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
அப்படியிருக்கும் நிலையில், அந்த கணவன் மன அழுத்தத்திற்குள்ளாக, இருவருக்கும் இடையில் வாக்குவாதங்கள் துவங்கியிருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் தனது படிப்புக்கு பிரச்சினை என்று மனைவி கருத, இருவரும் பிரிய முடிவு செய்துள்ளார்கள்.
அப்போதுதான் அவர்கள் தொடர்ந்த வழக்கில் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தாம்பத்திய உறவில் ஈடுபட இயலாத நிலை இருந்தால் மட்டுமே திருமணத்தை செல்லாது என அறிவிக்கமுடியும் என கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.
ஆனால், மேல் முறையீட்டு நீதிமன்றமோ, நமது நாடு பல்வேறு கலாச்சாரங்கள் கொண்டவர்கள் வாழும் நாடு என்றும், வழக்குத் தொடர்ந்தவர்களின் கலாச்சார வழக்கங்களையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது.
அந்த தம்பதியர் குருத்துவாராவில் திருமணம் செய்த பின்னர் மட்டுமே தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும் என்ற தங்கள் மத வழக்கத்தின் அடிப்படையில் மட்டுமே உடல் ரீதியாக இணைந்து வாழாமல் இருந்திருக்கிறார்கள்.
ஆகவே, அவர்கள் தாம்பத்திய உறவு கொள்ளமுடியாமல் இருந்ததற்கான காரணம் முற்றிலும் அவர்களது மத நம்பிக்கையை சார்ந்தது. அவர்களது மத நம்பிக்கையையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
எனவே, மதத்தின் அடிப்படையில் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என்றாலும், அவர்களது திருமணம் செல்லாது என்று கூறி தீர்ப்பளித்துள்ளார் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி.
இதுபோல் தாம்பத்திய உறவு இல்லாததால் செல்லாது என அறிவிக்கக்கோரிய பல வழக்குகள் கனடாவில் நடைபெற்றுள்ள நிலையில், மத நம்பிக்கையின் அடிப்படையில் தாம்பத்திய உறவு கொள்ளாத தம்பதியருக்கிடையிலான திருமணம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்ட இந்த வழக்கு, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.