கனடாவில் கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் தரும் மற்றொரு மருந்து கண்டுபிடிப்பு: மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி
கனடாவில் சமீபத்தில் நைட்ரிச் அமில ஸ்பிரே ஒன்று கொரோனாவுக்கெதிராக நல்ல பலன் தருவதாக செய்தி வெளியானது.
தற்போது, அதேபோல், மற்றொரு மருந்தும் நல்ல பலன் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய ஆய்வு ஒன்றில், colchicine என்ற மருந்து கொரோனா சிகிச்சையில் நல்ல பலனளிப்பதாக தெரியவந்துள்ளதுடன், நோயின் பக்கவிளைவுகளையும் அது குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக கனேடிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த மருந்து கொரோனாவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் முதல் விழுங்கக்கூடிய மருந்து என்பதால், இது ஒரு மிகப்பெரும் அறிவியல் கண்டுபிடிப்பு என மொன்றியல் இதய நோய் சிகிச்சை மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேற்கோள்ளப்பட்ட ஆய்வில், colchicine, கொரோனாவால் ஏற்படும் மரணம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 21 சதவிகிதம் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு, கனடா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் 4,488 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 4,159பேருக்கு பி.சி.ஆர் முறையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது.
அவர்களுக்கு colchicine மருந்து கொடுக்கப்பட்டபோது, 25 சதவிகிதம் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டதுடன், 50 சதவிகிதம் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வைக்கப்படுவதற்கான தேவை தவிர்க்கப்பட்டது.
மேலும், 44 சதவிகிதம் மரணமும் இந்த மருந்தால் தவிர்க்கப்பட்டதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதால் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.