கணவனை இழந்த பிரித்தானிய பெண்மணி... அவரைப்போல் பிரான்சில் ஓட்டுநர் உரிமம் பெற இயலாமல் ஏராளமானோர் தவிக்கும் அவலம்
பிரான்சில் வாழும் பிரித்தானியப் பெண்மணி ஒருவர் சமீபத்தில் விதவையான நிலையில், அவரது ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டது.
Josephine Washington (71) என்ற அந்தப் பெண், நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் வசிப்பதால், குப்பை போட வேண்டுமென்றால் கூட, அவர் காரில்தான் செல்லவேண்டும்.
இப்படியிருக்கும் சூழலில், இவ்வளவு நாட்கள் கணவரை நம்பி இருந்தவர், இப்போது ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டதால் ஏராளம் செலவு செய்து வாடகை காரில் பயணித்து அன்றாட வேலைகளை செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளார். இதற்கெல்லாம் காரணம், பிரெக்சிட்!
பிரெக்சிட்டைக் கொண்டுவந்தவர்கள், இப்போது அதைப்பற்றி நினைக்கிறார்களோ என்னவோ, அதனால் வெளிநாடுகளில் வாழும் மக்கள் இன்று வரை அவதியுறுகிறார்கள்.
காரணம், இன்று வரை பிரான்சில் வாழ்பவர்கள் தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமங்களை பிரான்ஸ் ஓட்டுநர் உரிமங்களாக மாற்றிக்கொள்வதற்கான சரியான நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் ஓட்டுநர் உரிமங்கள் குறித்து முறையான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படாததால் பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமங்களை பிரான்ஸ் ஓட்டுநர் உரிமமாக மாற்றிக்கொள்ளவும், காலாவதியாகிவிட்ட உரிமங்களை புதுப்பிக்க இயலாமலும் தவித்து வருகிறார்கள்.
ஆகவே, பொறுத்துப் பொறுத்து சலித்துப்போன பிரான்ஸ் வாழ் பிரித்தானியர்கள், இந்த பிரெக்சிட் தொல்லையால் உருவான பிரச்சினைக்கு ஒரு முடிவு கொண்டு வரும் வகையில், ஓட்டுநர் உரிமங்கள் பெற வழிவகை செய்யுமாறு கோரி புகார் மனு ஒன்றை பிரித்தானிய இணையதளத்தில் உருவாக்கியுள்ளார்கள்.
அதில் கையொப்பம் இடுமாறு அவர்கள் பாதிக்கப்பட்ட பிரித்தானியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.