அவுஸ்திரேலியாவுடன் மோதவிருக்கும் இலங்கை அணிக்கு மேலும் ஒரு பெரிய இழப்பு!
அவுஸ்திரேலியாவுடன் மோதவிருக்கும் இலங்கை டி20 அணிக்கு மேலும் ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 11ம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், அவுஸ்திரேலியா புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், இலங்கை அணியின் முக்கிய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
ஆல்-ரவுண்டர் சாமிக்க கருணாரத்னவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா செல்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது சாமிக கருணாரத்னவுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் ரொமேஷ் ரத்நாயக்க, வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார மற்றும் பயிற்சியாளர் தில்ஷான் பொன்சேகா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.