ஜனவரி 1 முதல்... சர்வதேச மாணவர்களுக்கெதிராக கனடா எடுத்துள்ள மற்றொரு நடவடிக்கை
கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள், புலம்பெயர்வோர் மீது ஏதோ கடுப்பில் இருப்பது போலிருக்கிறது, அந்நாடுகளிலிருந்து வரும் செய்திகளைப் பார்த்தால்...
குறிப்பாக, காலையில் எழுந்ததுமே, இந்தியாவைக் குறிவைத்து ஏதாவது செய்தேயாகவேண்டும் என முடிவு செய்துகொண்டே அலுவலகத்துக்கு வருவதுபோல் செயல்படுகிறார்கள் புலம்பெயர்தல் தொடர்பிலான அமைச்சர்கள், அதிகாரிகள்.
ஜனவரி 1 முதல்...
2024, ஜனவரி 1ஆம் திகதி முதல், கனடாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரம் வரைதான் வேலை செய்ய அனுமதி என இப்போதுதான் ஒரு தகவல் வெளியானது.
தற்போது, அதற்குள் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை வைத்துள்ளதைக் காட்டவேண்டும் என ஒரு விதி உள்ளது.
அந்த தொகை தற்போது கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அது தொடர்பாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 2024, ஜனவரி 1 முதல், சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகை, 10,000 கனேடிய டொலர்களிலிருந்து 20,635 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்கள் நலனின் அதீத அக்கறை கொண்டுள்ள மார்க் மில்லர், மாணவர்கள் கனடாவில் பணக்கஷ்டத்தை அனுபவிக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்!
மேலும், கனடாவில் வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள்தான் காரணம் என சில அரசியல்வாதிகள் கூறியிருந்ததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அதனால் மார்க் மில்லர் கடும் கடுப்படைந்துள்ளார் போலும், வீடுகள் தட்டுப்பாட்டுக்கு சர்வதேச மாணவர்களை குறை சொல்வது தவறுதான், அதே நேரத்தில், தங்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கூடகொண்டுவராமல் கனடாவுக்கு வரலாம் என்று சர்வதேச மாணவர்களிடம் கூறுவதும் தவறுதான் என்று அவர் கூறுவதிலிருந்து, அவர் எந்த அளவுக்கு விமர்சனங்களால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |