கனேடிய மாகாணமொன்றில் பரவும் மற்றொரு நோய்: சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனேடிய மாகாணம் ஒன்றில் காசநோய் (Tuberculosis) பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.
கனடாவின் வடக்கு Saskatchewan மாகாணத்தில் 13 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு காசநோய் பரவல் (outbreak of tuberculosis) உள்ளதாக கனேடிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இதுவரை, Fond Du Lac பகுதியில் 7 பேருக்கு காசநோய் இருப்பதும், அவர்களுடன் 70 பேர் நெருங்கிய தொடர்பிலிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Black Lake பகுதியில் 6 பேருக்கு காசநோய் இருப்பதும், அவர்களுடன் 157 பேர் நெருங்கிய தொடர்பிலிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காசநோய் என்பது சுவாசம் மூலம் பரவும் ஒரு நோயாகும். அத்துடன், அந்நோய் தொற்றியோர், மருத்துவரின் தீவிர கண்காணிப்பின் கீழ், முழுமையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
அக்டோபர் மாதம் 8ஆம் திகதி நிலவரப்படி, இதுவரை 20 பேர் வரை காசநோய்க்கு சிகிச்சை எடுத்துவருவதாக கனடா ஆரம்ப சுகாதார சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. The Athabasca Health Authority (AHA), காசநோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக Express.co.uk என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
காசநோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டும், அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்பதுதான் கசப்பானதொரு உண்மை. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 115 ஆண்டுகள் ஆகியும், அதற்கான சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியும் 2015 ஆண்டு நிலவரப்படி 10 மில்லியன் பேருக்கு காசநோய் உருவாகியுள்ளது.
இன்றும், மனிதனின் மரணத்துக்கு அதிகம் காரணமான 10 விடயங்களில் ஒன்றாக காசநோய் உலகமெங்கும் காணப்படுவது வருந்தத்தக்க விடயம்தான்.