காலையில் அருந்திய தேநீர்... 6 நாட்கள் மருத்துவமனையில்: நர்சால் சுவிஸ் பெண்மணிக்கு நடந்த கொடூரம்
சுவிட்சர்லாந்தில் நர்ஸ் ஒருவர் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த பெண்மணியை கொல்ல முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பாஸல் மாநிலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் செல்வந்தரான பெண்மணி ஒருவர் தங்கி வந்துள்ளார். அவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு நர்ஸிடம், தமது மறைவுக்கு பிறகு, ரகசிய வங்கிக் கணக்கில் எஞ்சிய பணம் மொத்தமும் கைப்பற்றிக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளார்.
மட்டுமின்றி அந்த ரகசிய வங்கிக் கணக்குக்கான அதிகாரத்தையும் அந்த செவிலியருக்கு 2018 ஆகஸ்ட் மாதம் அளித்துள்ளார். அப்போது அந்த வங்கிக் கணக்கில் 80,739 பிராங்குகள் இருந்துள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 13ம் திகதி அந்த 32 வயதான நர்ஸ் குறித்த பெண்மணியை விஷம் வைத்து கொல்ல முயன்றுள்ளார். அந்த வயதான பெண்மணிக்கான உணவில் ஆமணக்கு விதை தூள் கலந்து அளித்துள்ளார்.
ஆனால் அந்த முயற்சியில் இருந்து குறித்த பெண்மணி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். தொடர்ந்து செப்டம்பர் 19ம் திகதியும் அந்த நர்ஸ் ஆமணக்கு விதை தூளை பயன்படுத்தி கொல்ல முயன்றுள்ளார். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இறுதியாக டிசம்பர் 1ம் திகதி காலை தேநீரில் ஆமணக்கு விதை தூள் கலந்து அந்த வயதான பெண்மணிக்கு அளித்துள்ளார். இதில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண்மணி பாஸல் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, 6 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார்.
இதனிடையே குணமடைந்து மீண்டும் முதியோர் இல்லம் திரும்பிய குறித்த பெண்மணி, தமது பிள்ளைகளுக்கும் தெரியாத அந்த ரகசிய வங்கிக்கணக்கில் இருந்து 20,000 பிராங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதை அறிந்த அவர், தொடர்புடைய நர்ஸ் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை விசாரித்த பொலிசார், பணத்திற்காக குறித்த பெண்மணியை மூன்று முறை கொல்ல முயன்ற சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து 2019 டிசம்பர் 28ம் திகதி குறித்த நர்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தற்போது பாஸல் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.