Anthropic IPO வரலாற்றுச் சாதனை - மில்லியனர்களாகும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்
Anthropic IPO Creates Thousands of Millionaires: Anthropic IPO அறிமுகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மில்லியனர்களாக மாறவுள்ளனர்.
Anthropic IPO: மில்லியனர்களாகும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் வேகமாக வளர்ந்து வரும் Anthropic நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீடு (IPO) அமெரிக்க தொழில்நுட்ப உலகில் புதிய செல்வப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் அறிமுகமாகும் நிலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே நாளில் பல மில்லியன் டொலர் மதிப்புடைய செல்வந்தர்களாக மாற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பங்குகள்
வெறும் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட Anthropic நிறுவனம் தற்போது உலகின் மிக மதிப்புமிக்க AI நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. நிறுவனத்தில் சுமார் 5,300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, ஊழியர்களுக்கு பெருமளவில் பங்கு விருப்பங்கள் (Stock Options) மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள் (RSU) வழங்கப்பட்டுள்ளன.
Anthropic நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.4 டிரில்லியன் டொலர்
நிறுவனத்தின் பங்கு விலை 83 அமெரிக்க டொலராக வர்த்தகம் செய்யப்பட்டால், Anthropic நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.4 டிரில்லியன் டொலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அது உருவெடுக்கிறது.
இந்த IPO-க்கு பிறகு, Anthropic ஊழியர்களின் மொத்த செல்வ மதிப்பு சுமார் 232 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஊழியரின் சொத்து மதிப்பு 44 மில்லியன் டொலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் இணைந்த 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தலா 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்து மதிப்பைப் பெறக்கூடும் என முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர். சிலர் பில்லியனர் பட்டியலிலும் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நிறுவனரின் சொத்து மதிப்பு..
Anthropic நிறுவனத்தின் 7 நிறுவனர்களும் தலா 230 முதல் 240 மில்லியன் பங்குகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு நிறுவனரின் சொத்து மதிப்பும் சுமார் 20 பில்லியன் டொலராக இருக்கலாம்.
இந்த IPO-வின் தாக்கம் தொழில்நுட்ப துறையைத் தாண்டி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வீட்டு சந்தையில் முதலீடுகள் அதிகரிப்பதோடு, தொண்டு நிறுவனங்களுக்கும் பெரும் நிதியுதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
AI துறையில் உருவாகும் வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மட்டுமல்லாமல், உலகின் மிக வேகமான செல்வ உருவாக்க நிகழ்வுகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது என்பதற்கு Anthropic IPO ஒரு முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |