தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 2,500 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களில் முதலாவது நியூயார்க் நகரில் தொடங்கியுள்ளது.
துருப்புகள் தயார் நிலையில்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக No Kings என்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கையில், நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள், தொடர்புடைய போராட்டக்காரர்கள் தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்துடன் கூட்டணி வைத்திருப்பதாக ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, பல அமெரிக்க மாகாணங்களில் உள்ள குடியரசுக் கட்சி ஆளுநர்கள் தேசிய காவல்படை துருப்புக்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் வர்ஜீனியா மாகாண ஆளுநர்கள் தங்கள் மாகாணத்தின் தேசிய காவல்படை துருப்புக்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் நியூயார்க்கில் முதல் ஆர்ப்பாட்டம் துவங்கும். இதனையடுத்து நாடு முழுவதும் இன்று ஒரு நாள் ஆர்ப்பாட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பெர்னி சாண்டர்ஸ் முக்கிய பேச்சாளராக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் வாஷிங்டன் டிசியிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் பிற பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
ஐரோப்பா முழுவதும்
ட்ரம்பின் சர்வாதிகார போக்கை சவால் விடும் வகையிலேயே இந்த போராட்டங்கள் முன்னெடுப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். தனது ஆட்சி காலாகாலத்திற்கும் நீடிக்கும் என்று ட்ரம்ப் கருதுகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மட்டுமின்றி, அமெரிக்காவில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை, குழப்பம், ஊழல் மற்றும் கொடுமைக்கு எதிராக மக்கள் பின்வாங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மட்டுமின்றி, பெர்லின், மாட்ரிட் மற்றும் ரோம் உட்பட ஐரோப்பா முழுவதும் No Kings ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மக்கள் வீதியில் இறங்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சில குடியரசுக் கட்சியினர் No Kings ஆர்ப்பாட்டங்களை அமெரிக்காவை வெறுப்போர்களின் பேரணி என்று விமர்சித்துள்ளனர்.
இன்றைய No Kings ஆர்ப்பாட்டங்களில் Jane Fonda, Kerry Washington, John Legend, Alan Cumming மற்றும் John Leguizamo உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |