மருந்தையே எதிர்த்துப் போராடும் நோய்க்கிருமிகள்: எதிர்ப்பு முயற்சியில் சுவிஸ் அறிவியலாளர்கள்
முதல் உலகப்போரின்போது, போரால் உயிரிழந்தவர்களைவிட, அந்த காலகட்டத்தில் பரவிய நோய்த்தொற்றுக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என கூறப்படுவதுண்டு.
1928இல், அலெக்சாண்டர் பிளெமிங் என்பவர், பெனிசிலின் என்னும் முதல் ஆன்டியாட்டிக்கை கண்டுபிடிக்க, அதற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், அந்த மருந்து நோய்த்தொற்றுக்களை குணமாக்க பெரிதும் உதவியாக இருந்தது.
மருந்தையே எதிர்த்துப் போராடும் நோய்க்கிருமிகள்
பரிணாமக் கொள்கையின்படி, ஒவ்வொரு உயிரும், எப்படியாவது பிழைத்துக்கொள்ளவேண்டும், தனது சந்ததியை உருவாக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறதாம். அதற்கு பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளும் விதிவிலக்கில்லை என்றே தோன்றுகிறது.
ஆக, அறிவியலாளர்கள் பெனிசிலின் போன்ற ஆன்டியாட்டிக்குகளைக் கண்டுபிடித்து நோய்க்கிருமிகளைக் கொல்ல முயலும் அதே நேரத்தில், அந்த நோய்க்கிருமிகளோ, அந்த மருந்தை எப்படி எதிர்ப்பது என திட்டமிடுவது போல் தெரிகிறது.
அதன் விளைவுதான், மருந்தையே எதிர்த்துப் போராடும் நோய்க்கிருமிகள் (antibiotic-resistant bacteria) உருவாதல். இப்போதைய காலகட்டத்தில், இந்த மருந்தையே எதிர்த்துப் போராடும் நோய்க்கிருமிகள், மருத்துவ உலகுக்கு பெரும் சவாலாக உள்ளன.
ஒருவருக்கு ஒரு நோய்த்தொற்று என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு சிகிச்சைக்காக ஒரு ஆன்டியாட்டிக் மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், அவருக்கு நோயை உண்டு பண்ணிய அந்த நோய்க்கிருமியோ, அந்த மருந்தையே எதிர்த்து அதை செயல்படவிடாமல் செய்து விடுகிறது. விளைவு? மரணம் கூட ஏற்படலாம்!
2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1.27 மில்லியன் மக்கள் இந்த மருந்தையே எதிர்த்துப் போராடும் நோய்க்கிருமிகளால் (antibiotic-resistant bacteria) உயிரிழந்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை, அந்த காலகட்டத்தில் எயிட்ஸ், மலேரியா போன்ற நோய்களால் உயிரிழந்தவர்களை விட அதிகமாகும்.
எதிர்ப்பு முயற்சியில் சுவிஸ் அறிவியலாளர்கள்
இந்நிலையில், இப்படி மருந்தையே எதிர்த்துப் போராடும் சில நோய்க்கிருமிகளை எதிர்க்கும் வகையில் (antibiotic-resistant bacteria), மருந்தொன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சுவிஸ் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் பேஸலில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்று, மருந்தையே எதிர்த்துப் போராடும் Acinetobacter baumannii என்னும் ஒருவகை நோய்க்கிருமியால் ஏற்படும் தொற்றை குணமாக்குவதற்காக, zosurabalpine என்னும் மருந்தொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக மருத்துவ வட்டாரங்களில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
என்றாலும், இப்போதைக்கு இந்த மருந்து எலிகள் மீது மட்டுமே பயன்படுத்தப்பட்டு பயனுள்ளது என தெரியவந்துள்ளது. அதை மனிதர்களுக்குக் கொடுக்கவேண்டுமானால், இன்னமும் கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |