இதை செய்யாதீர்கள்... கொரோனாவுக்குப் பின் மற்றொரு மறைமுக கொள்ளை நோய் உருவாகலாம்: பிரித்தானிய அறிவியலாளர்கள் எச்சரிக்கை
சாதாரண ஜலதோஷத்திற்கெல்லாம் ஆன்டிபயாட்டிக்குகளை எடுத்துக்கொண்டால், கொரோனா மறைந்தபின் மற்றொரு மறைமுகக் கொள்ளை நோயை எதிர்கொள்ளவேண்டி வரும் என பிரித்தானிய அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சாதாரண ஜலதோஷம் வந்ததுமே உடனடியாக ஆன்டிபயாட்டிக்குகளை எடுத்துக்கொள்வது ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
எவ்வளவு பெரிய பிரச்சினை என்றால், உலகில் தீவிரவாதம் மற்றும் புவி வெப்பமயமாதலால் உயிரிழப்பவர்களைவிட அந்த பிரச்சினையால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
அதாவது, ஆண்டொன்றிற்கு அந்த பிரச்சினையால் 700,000 பேர் உயிரிழக்கிறார்களாம்.
அது என்ன பிரச்சினை?
அதாவது, லேசாக ஜலதோஷம் வந்தாலோ, அல்லது தொண்டை கரகரப்பு ஏற்பட்டாலோ, உடனடியாக ஒருவர் ஆன்டிபயாட்டிக்குகளை எடுத்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
ஆன்டிபயாட்டிக்குகள் என்பவை பாக்டீரியா எனப்படும் நோய்க்கிருமிகளால் உருவாகும் நோய்களுக்கான மருந்துகள். ஜலதோஷம் என்பது வைரஸால் உருவாகும் ஒரு பிரச்சினை. ஆக வைரஸால் உருவாகும் பிரச்சினைக்காக ஆன்டிபயாட்டிக்குகளை சாப்பிட்டால், உடலுக்குள் செல்லும் அந்த ஆன்டிபயாட்டிக்குகள் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக, உடலில், அந்த ஆன்டிபயாட்டிக்குகளை எதிர்க்கும் நோய்க்கிருமிகள் உருவாகிவிடும். அதாவது, அடுத்த முறை அதே நபர் அதே நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டால், முன்பு அவர் எடுத்துக்கொண்ட ஆன்டிபயாட்டிக் அவருக்கு வேலை செய்யாது. அத்துடன், அவரிடமிருந்து அந்த நோய்க்கிருமி இன்னொருவருக்கு பரவினால், அவருக்கும் அந்த ஆன்டிபயாட்டிக் வேலை செய்யாது. சுருங்கச் சொன்னால், புதிது புதிதாக நோய்கள் உருவாகும், ஆனால், அவற்றிற்காக பயன்படுத்தும் மருந்து வேலை செய்யாது.
ஆகவே, சாதாரண ஜலதோஷத்திற்கெல்லாம் ஆன்டிபயாட்டிக்குகளை எடுத்துக்கொள்ளவேண்டாம் என பிரித்தானிய சுகாதார ஏஜன்சியின் தலைவரான Dr Susan Hopkins எச்சரித்துள்ளார்.
அப்படி எடுத்துக்கொண்டால், கொரோனா மறைந்தபின் மற்றொரு மறைமுகக் கொள்ளை நோயை எதிர்கொள்ளவேண்டி வரும் என்று கூறும் அவர், நாடு, ஒரு கொள்ளைநோயிலிருந்து அடுத்த நோய்க்குள் சென்றுவிடக்கூடாது என்பது மிகவும் முக்கியமாகும் என்கிறார்.