டீ கடை தொடங்கி ரூ.150 கோடி சொத்து சேர்த்த 27 வயது இளைஞர்! இளம் தொழிலதிபரின் வெற்றிக் கதை
27 வயதில் 150 கோடி மதிப்புமிக்க சொத்தின் சொந்தக்காரரான அனுபவ் துபேவின் கதையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
யார் இவர்
இந்திய மாநிலம் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் அனுபவ் துபே. இவர் ரூ.3 லட்சம் முதலீட்டில் தொடங்கிய தொழிலால் இன்று 150 கோடி மதிப்பு மிக்க சொத்துக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
கடந்த 2016 -ம் ஆண்டு ஒரு டீ கடையைத் தொடங்கி, இன்று 195 நகரங்களில் பெரிய அளவில் கிளைகளை திறந்துள்ள "சாய் சுட்டா பார்” டீ கடையின் நிறுவனர் தான் இந்த அனுபவ் துபே.
1996 -ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் ரேவா மாவட்டத்தில் பிறந்தவர் அனுபவ் துபே. இவர் பி.காம் படித்துள்ளார். இவரது அப்பா, இவரை ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக இவர், டெல்லியில் பயிற்சி எடுத்துத் தேர்வில் தோல்வி அடைந்தார். மேலும் சி.ஏ தேர்விலும் தோல்வி அடைந்தார்.
அப்போது தான், இவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.
டீ கடை ஆரம்பித்த அனுபவ் துபே
அந்த நேரத்தில் பி.காம் படித்த ஆனந்த நாயக் என்பவருடன் இணைந்து ரூ.3 லட்சம் முதலீட்டில் டீ கடை ஒன்றை தொடங்கினார். இவர்கள், தங்களுடைய டீ கடைகளில் மற்ற கடைகளை ஒப்பிடும் போது சில விடயங்கள் வித்தியாசமாக இருந்தன.
வாடிக்கையாளர்களுக்கு டீயை மண் குவளைகளில் கொடுத்தனர். மேலும், புகைப்பிடிப்பதற்கு தடை விதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், முதல் கடையை பெண்கள் விடுதிக்கு அருகில் அமைத்திருந்தால் நல்ல வியாபாரம் அதிகரித்து வந்தது.
அதுமட்டுமல்லாமல், மேசை, நாற்காலி போன்றவற்றை நண்பர்கள் உதவியுடன் வாங்கி உபயோகித்தனர். ’சாய் சுட்டா பார்’ என பெயர் பலகையில் எழுதி வைத்தனர்.
முதலில் இவர்கள் ஆரம்பித்த தொழில் கஷ்டத்தில் இயங்கினாலும், கடைசியில் வெற்றியை கண்டது. சுகாதாரமான சூழலில் மண் குவளையில் 20 வகை டீயை அறிமுகம் செய்தது மிகவும் பிரபலம் ஆனது.
இந்தியா மட்டுமின்றி துபாய் மற்றும் ஓபன் நாடுகளிலும் பல நகரங்களில் 195 கிளைகளை தொடங்கினர். இந்த வருடத்தில் மட்டும் இவர்களின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |