கனடா எல்லையில் இந்தியக் குடும்பம் உயிரிழந்த வழக்கு: நீதிமன்றத்தின் முடிவு
Human smuggling conviction upheld in death of Indian family: இந்தியக் குடும்பம் ஒன்று கனேடிய எல்லையில் பலியான வழக்கில் குற்றவாளி ஒருவரின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து பலியான வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயம் நினைவிருக்கலாம்.
அந்த வழக்கில், குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்கள்.
கனடா எல்லையில் பலியான இந்தியக் குடும்பம்
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து பரிதாபமாக பலியானார்கள்.

அந்த வழக்கு தொடர்பில், ப்ளோரிடாவில் வாழும் இந்தியரான ஹர்ஷ்குமார் பட்டேல் (Harshkumar Ramanlal Patel) மற்றும் ப்ளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் (Steve Shand) ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அந்த வழக்கில், ஹர்ஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் ஒரு மாதம் சிறைத்தண்டனையும், ஸ்டீவுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் முடிவு
அந்த வழக்கில், குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்தியரான ஹர்ஷ்குமார் பட்டேலின் மேல்முறையீட்டு மனு, திங்கட்கிழமையன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றில் அந்த வழக்கு நடைபெற்ற நிலையில், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த நீதிமன்றம், தீர்ப்பு வழங்கிய நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஆதரிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹர்ஷ்குமார் பட்டேல், தனது தண்டனைக் காலத்துக்குப் பின் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.