Apple நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் கணிணி ஏலம்! எவ்வளவு ரூபாய்க்கு போனது தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் கணிணி ஆப்பிள் 1 அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் டெக்னாலாஜி உலகில் எத்தனை ஸ்மார்ட் போன்கள்,கணிணி போன்றவை வந்தாலும், ஆப்பிளுக்கு என்று ஒரு தனிமரியாதை உள்ளது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் தயாரித்த முதல் கணினிகளில் ஒன்றான ஆப்பிள் 1 கணினி தற்போது அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது.
மிகவும் அரிதான ஹவாய் கோவா மரத்தால் செய்யப்பட்ட இந்த ஆப்பிள் 1 இன்னும் செயல்படுகிறது. 1976ஆம் ஆண்டு, வெளியான 200 ஆப்பிள் 1 கணினிகளில் இதுவும் ஒன்று. தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த கணினியை இதுவரை இரண்டு பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
முதலில் இந்த கணினி கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் இருந்தது. அதை தனது மாணவர்களில் ஒருவருக்கு அவர் 650 டொலருக்கு விற்றுள்ளார். இந்த கணினியுடன் இரண்டு கேசட் டேப்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பயனர் கையேடுகள் மற்றும் ஆப்பிள் மென்பொருள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் 1 நிபுணர் கோரி கோஹன் கூறுகையில், இது விண்டேஜ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி தொழில்நுட்ப காதலர்களின் சொர்க்கம். இந்த கணினி மிகவும் உற்சாகம் தரும் பொருட்களில் ஒன்று என கூறியுள்ளார்.
கடந்த 1976ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி, ஸ்டீவ் ஜாப்ஸ், வோஸ்னியாக், ரொனால்ட் வெய்ன் ஆகிய மூவரும் சேர்ந்து கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினர்.
ஆப்பிள் 1 கணினியைத் தயாரிக்கும் செலவுகளுக்காக ஜாப்ஸ் தனது விடபிள்யூ மைக்ரோபஸ் வாகனத்தையும் வோஸ்னியாக் தனது HP 65 கால்குலேட்டரை 500 டாலருக்கு விற்றனர்.
அதன் பிறகு, உருவாக்கப்பட்ட ஆப்பிள் 1 கணினி 1976-ஆம் ஆண்டு 666.66 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டது. உலகில் தற்போது மொத்தம் 20 ஆப்பிள் 1 கணினிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்த 20 கணினிகளில் ஒன்று தான் தற்போது 400,000 டொலருக்கு (சுமார் 2.97 கோடி ரூபாய்) ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.