ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் தொடர்பில் பேஸ்மேக்கர் பொருத்தியுள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் சில, பேஸ்மேக்கர் பொருத்தியுள்ளவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளதால், அது தொடர்பில் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறிப்பிட்ட இதய பிரச்சினை கொண்டவர்கள் பேஸ்மேக்கர் என்னும் பேட்டரியால் இயங்கும் கருவியை தங்கள் இதயத்தில் பொருத்தியிருப்பார்கள். அவர்களது இதயத்துடிப்பு சீரற்றதாக ஆகும்போதோ, அல்லது குறையும்போதோ இந்த பேஸ்மேக்கர் அதை உணர்ந்துகொண்டு இதயத்துடிப்பை சீராக்க உதவி செய்யும்.
சமீபத்திய ஆய்வு ஒன்றில், iPhone 12 Max Pro ஒன்றை இந்த பேஸ்மேக்கருக்கு அருகில் கொண்டு சென்றபோது, அது பாக் செய்யப்பட்டிருந்த நிலையிலும், பேஸ்மேக்கரின் இயக்கத்தை நிறுத்திவிட்டது கண்டறியப்பட்டது.
ஆகவே, அது குறித்த சில ஆய்வுகளை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், தங்கள் தயாரிப்புகளில் காந்தம் மற்றும் மின்காந்தம் கொண்ட தயாரிப்புகளை பேஸ்மேக்கர், defibrillator போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு அருகில் கொண்டு செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களுடன் ஆப்பிள் தயாரிப்புகள் ஆபத்தான வகையில் இடைபடுவதை தவிர்க்க, உங்கள் ஆப்பிள் தயாரிப்புகளை உங்கள் பேஸ்மேக்கர் போன்ற மருத்துவ உபகரணங்களிலிருந்து குறைந்தபட்சம் 6 இஞ்ச் தொலைவிலும் (15 சென்றிமீற்றர்), அவை வயர்லஸ் முறையில் சார்ஜ் செய்யப்படுபவையானால், அவற்றை 12 இஞ்ச் தொலைவிலும் (30 சென்றிமீற்றர்) வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரையும், உபகரண தயாரிப்பாளரையும் அணுகவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்பது குறித்த தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.