Fact check: உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீக்கியர்கள் இலவச உணவளித்து வருகிறார்களா?
உக்ரைனை ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சீக்கிய சேவை அமைப்பு ஒன்று இலவச உணவளித்து வருவதாக புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியானது.
விரைவில், அது 4,000 முறை பகிரப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிந்தன.
ஆனால், அந்த செய்தி உண்மையில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உண்மையில், அந்த புகைப்படம் கனடாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. ’கனடாவின் முதல் உணவு ட்ரக் - Guru Nanak Dev Ji’s LANGAR - பசிக்கு விடைகொடுப்போம்’ என்ற வாசகத்துடன் முன்னதாக வெளியான ஒரு செய்தி, அந்த புகைப்படத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர்ந்துள்ளது.
ரொரன்றோவில் இயங்கும் Sikh Sewa Society என்ற சீக்கிய அமைப்பு, ரொரன்றோவில் மக்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீக்கிய அமைப்பு ஒன்று இலவச உணவளிப்பதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து, Sikh Sewa Society அமைப்பு, தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தங்கள் அமைப்பு கனடாவுக்கு வெளியில் எந்த நாட்டிலும் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, போலிச் செய்திகளை பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.